இருசக்கர வாகனங்களை தள்ளுபடி விலையில் விற்றதால் விற்பனை மையங்கள் திக்குமுக்காடியது


இருசக்கர வாகனங்களை தள்ளுபடி விலையில் விற்றதால் விற்பனை மையங்கள் திக்குமுக்காடியது
x
தினத்தந்தி 1 April 2017 6:00 AM IST (Updated: 1 April 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்– III ரக இரு சக்கர வாகனங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டதால், தள்ளுபடி விலையில் அவை விற்பனை செய்யப்பட்டன.

சென்னை,

பி.எஸ்–  III   ரக இரு சக்கர வாகனங்களை பதிவு செய்ய தடை
விதிக்கப்பட்டதால், தள்ளுபடி விலையில் அவை விற்பனை செய்யப்பட்டன. இதையடுத்து விற்பனை மையங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்ததால் திக்குமுக்காடியது.

பி.எஸ்–  III  இருசக்கர வாகனங்கள்

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உலக வெப்பமயமாதலை குறைக்கவும், மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் உடல்நிலையை பாதுகாக்கவும் பி.எஸ்–  III   மற்றும் 2–ன் கீழ் தயாரிக்கப்பட்ட ரக வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவை இன்று (சனிக்கிழமை) முதல் நிறுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தரநிலையில் தயாரிக்கப்பட்ட 6.71 லட்சம் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் நாடு முழுவதும் விற்பனையாளர்களிடம் இருப்பில் இருந்ததால் அவற்றை தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதாக அந்தந்த நிறுவனத்தின் மையங்கள் அறிவித்தன.

அதன்படி, பி.எஸ்–  III   ரக ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பிலான இருசக்கர வாகனங்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையிலும், ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பிலான இருசக்கர வாகனங்கள் ரூ.12 ஆயிரத்து 500 வரையிலும், டி.வி.எஸ். நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் ரூ.20 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி விலையில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

திக்குமுக்காடியது

இதையடுத்து நேற்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தள்ளுபடி விலையில் பி.எஸ்–  III   ரக இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கு அந்தந்த நிறுவனங்களின் விற்பனை மையங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்க தொடங்கினர். இதனால் விற்பனை மையங்கள் திக்குமுக்காடின.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கடந்த 30–ந்தேதி வந்ததும், அதை பார்த்த பலர் உடனே விற்பனை மையங்களுக்கு சென்று தள்ளுபடி விலையில் இருசக்கர வாகனங்களை வாங்கிவிட்டனர். இதனால் விற்பனை மையங்களில் குறைவான அளவிலேயே மோட்டார் சைக்கிள்கள் நேற்று இருப்பு இருந்தது.

இந்தநிலையில் இதுபற்றிய அறிவிப்பு நேற்றும் வெளியானதால் ஏராளமானோர் விற்பனை மையங்களில் குவிந்தனர். குறைந்த அளவு இருப்புகள் இருந்ததால் முதலில் வந்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இருசக்கர வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டது.

வாக்குவாதம்

இந்த ரக இருசக்கர வாகனங்கள் தீர்ந்ததும், ஒவ்வொரு விற்பனை மையங்களிலும் இருப்பு இல்லை என்ற நோட்டீசு நுழைவுவாயில் பகுதியில் ஒட்டப்பட்டது. சில இடங்களில் விற்பனை மையத்தின் நுழைவுவாயில் பகுதியை மூடினர்.

இருசக்கர வாகனங்களை தள்ளுபடி விலையில் வாங்குவதற்காக ஆவலோடு வந்தவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். சில இடங்களில் விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

Next Story