கோவையில் 2–வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம்
2–வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவையில் ரூ.500 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
கோவை
இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்தியா முழுவதும் கடந்த 30–ந் தேதி காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் நேற்று 2–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதனால் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. கோவையில் இருந்து வெளியிடங்களுக்கும், வெளியிடங்களில் இருந்து கோவைக்கும் வர வேண்டிய சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகன உதிரி பாகங்கள், பெரிய தொழிற்சாலைகளுக்கு தேவையான எந்திரங்கள் லாரிகளில் தான் கொண்டு செல்லப்படுகின்றன. கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினமும் 30 லாரிகளில் என்ஜினீயரிங் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக அந்த சரக்குகள் அனைத்தும் தேக்கமடைந்துள்ளன.
லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்கோவையில் உள்ள மில்களில் தயாராகும் நூல்கள் லாரிகளில் வட இந்திய மில்களுக்கு தினமும் அனுப்பப்படுகின்றன. அவை அனைத்தும் தற்போது தடைபட்டுள்ளன. இந்தியாவின் மொத்த மோட்டார் பம்பு தேவையில் கோவையில் உள்ள தொழிற்சாலைகள் 45 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன. அதன்படி கோவையிலிருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தினமும் மோட்டார் பம்புகள் லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் தேங்கியுள்ளன.
கோவையிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய காய்கறி, பழங்கள், எந்திரங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது.
ரூ.500 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம்இந்த நிலையில் கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் கலியபெருமாள் தலைமை தா£ங்கினார். சங்க நிர்வாகிகள் முருகேசன், சின்னதம்பி, கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினார்கள். அதன்பின்னர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கலியபெருமாள் கூறியதாவது:–
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அன்றாட தேவையான காய்கறிகளின் விலையும் உயரும். மேலும் தொழில் நகரமான கோவையில் உற்பத்தியாகும் பல்வேறு பொருட்கள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கோவையில் ரூ.500 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. லாரிகள் வேலைநிறுத்தம் தொடருமானால் கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவுக்கு கொண்டு வரவேண்டும்லாரிகள் வேலைநிறுத்தம் குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) தலைவர் கே.கே.ராஜன் கூறியதாவது:–
பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட்ட பம்புசெட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் லாரிகள் வேலை நிறுத்தம் எதிர்பாராதது. மேலும் கோவையில் இயங்கி வரும் பம்பு செட்டு நிறுவனங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் பெரும் பின்னடைவினை ஏற்படுத்தும். லாரிகள் வேலை நிறுத்ததால் கோவையில் இயங்கி வரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் வெளிமாநிலங்களில இருந்து வரும் மூலப்பொருட்கள் வரத்து தடைபட்டுள்ளது. எனவே லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.