கோதவாடி குளத்தில் வண்டல் மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு


கோதவாடி குளத்தில் வண்டல் மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 April 2017 3:15 AM IST (Updated: 1 April 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தில் வண்டல் மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே குருநல்லிபாளையத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 320 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு மழைநீர் தேங்கினால் அருகில் உள்ள கிராமங்களான குருநல்லிபாளையம், கோதவாடி, செட்டியக்காபாளையம், ஆண்டிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். விவசாய தேவைக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால் கோதவாடி குளத்துக்கு சரிவர தண்ணீர் வரத்து இன்றி குளம் வறண்டு, புதர்மண்டியதுடன், சீமைக்கருவேல மரங்களும் அதிகமாக வளர்ந்து உள்ளன. இதனால் இந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கோதவாடி குளத்தை பாதுகாக்க பொதுப்பணித்துறையினர் கடந்த 2014–ம் ஆண்டு பி.ஏ.பி. கால்வாய் மூலம் தண்ணீரை கொண்டு வந்ததால், குளத்தில் சிறிதளவு தண்ணீர் தேங்கியது.

கிராம மக்கள் எதிர்ப்பு

இந்த நிலையில் கடந்த மாதம் 19–ந் தேதி தமிழக அரசு குடிமராமத்து பணியின் கீழ் கோதவாடி குளத்துக்குள் வந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, குளத்தின் ஒரு பகுதியை தூர்வாரி அங்குகிடைக்கும் வண்டல் மண்ணை விவசாய பணிகளை மேற்கொள்ளும் வகையில், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இதனிடையே குருநல்லிபாளையம் கிராம மக்கள் கோதவாடிகுளத்தில் வண்டல் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குளத்தில் மண் அள்ளும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் முதல்–அமைச்சர், மாவட்ட கலெக்டர், பொள்ளாச்சி சப்–கலெக்டர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்

குருநல்லிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோதவாடி குளத்தில் ஏற்கனவே மண் எடுத்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. மீண்டும் மண் எடுப்பதால் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வறட்சியான சூழ்நிலை உருவாகும். எனவே கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோதவாடி குளத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த முடிவு செய்து, தற்போது பணியை நிறுத்தி உள்ளோம். எனவே கோதவாடி குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்க கூடாது. எங்களது கோரிக்கைக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோதவாடி குளத்தில் வண்டல் மண் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 75 சதவீத சீமைக்கருவே மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள மரங்களை அகற்றும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் குளத்தை சீரமைத்து வைத்தால் மழைநேரங்களில் குளத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்.

மறு உத்தரவு

குளத்தில் இருந்த வண்டல் மண்ணை மட்டுமே எடுத்து விவசாய பணிக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இதுதொடர்பாக மறு உத்தரவு வந்தவுடன் மீண்டும் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story