கர்நாடகத்தில் நாளை நடைபெறும் முகாமில் 74.94 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முகாமில் 74.94 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் முகாமில் 74.94 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் கூறினார்.
கர்நாடக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
போலியோ பரவ வாய்ப்புபோலியோ நோய் இந்தியாவில் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இன்னும் நமக்கு அபாயம் உள்ளது. போலியோவில் பி–1, பி–2, பி–3 ஆகிய 3 வகையான போலியோ உள்ளது. இதில் பி–2, பி.3 போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. பி–1 போலியோ மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் கடைசியாக மேற்குவங்காள மாநிலத்தில் கடந்த 2011–ம் ஆண்டு இந்த போலியோ நோய் தாக்கி இருக்கும் தகவல் வெளியானது. அதன் பிறகு நாட்டில் வேறு எங்கும் போலியோ நோய் தாக்கவில்லை.
ஆனாலும், அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் போலியோ நோய் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. அந்த நாடுகள் மூலமாக இந்தியாவுக்கு போலியோ தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் பணி நமது நாட்டில் தொடரப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம்ஒவ்வொரு ஆண்டும் 2 கட்டமாக இந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 2–ந்தேதி (நாளை) மற்றும் 2–வது கட்ட முகாம் வருகிற 30–ந் தேதியும் நடக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் 2 சொட்டு மருந்து வழங்கப்படும்.
நாளை நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமிற்காக கர்நாடகத்தில் 32 ஆயிரத்து 617 பூத்துகள் மற்றும் 51 ஆயிரத்து 732 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்காக 1 லட்சத்து 3 ஆயிரத்து 464 சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 522 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்து 20 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
74.94 லட்சம் குழந்தைகளுக்கு...இந்த முகாமில் மாநிலம் முழுவதும் மொத்தம் 74.94 லட்சம் குழந்தைகளுக்கு இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதில் பெங்களூரு நகர், பெங்களுரு புறநகர் மற்றும் பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 14 லட்சத்து 8 ஆயிரத்து 452 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அனைத்து பெற்றோரும் தங்களின் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மையங்களுக்கு அழைத்து வந்து தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஷாலினி ரஜனீஸ் கூறினார்.