மணப்பாறை முதல் கல்பட்டி சத்திரம் வரை புதிதாக அமைக்கப்பட்ட 2–வது ரெயில் பாதையில் அதிகாரி ஆய்வு


மணப்பாறை முதல் கல்பட்டி சத்திரம் வரை புதிதாக அமைக்கப்பட்ட 2–வது ரெயில் பாதையில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 1 April 2017 4:00 AM IST (Updated: 1 April 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை முதல் கல்பட்டி சத்திரம் வரை புதிதாக அமைக்கப்பட்ட 2–வது ரெயில் பாதையில் டிராலியில் சென்று அதிகாரி ஆய்வு ரெயில் என்ஜின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது

மணப்பாறை,

மணப்பாறை முதல் கல்பட்டிசத்திரம் வரை புதிதாக அமைக்கப்பட்ட 2–வது ரெயில் பாதையில் டிராலியில் சென்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இருவழி அகல ரெயில் பாதை

வட மாவட்டங்களில் இருந்து தென் தமிழகத்திற்கு இரு மார்க்கத்திலும் செல்லும் ரெயில்களின் பிரதான வழித்தடமாக மணப்பாறை உள்ளது. இதனால் தினமும் அதிக அளவிலான ரெயில்கள் பகல் மற்றும் இரவு நேரத்தில் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் முதல் திண்டுக்கல் வரையிலான இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

இதில் மணப்பாறை முதல் திருச்சி வரையிலான இரண்டாவது அகல ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்று அந்த பாதையில் ரெயில்கள் சென்று வருகின்றன. இதைத்தொடர்ந்து மணப்பாறை முதல் திண்டுக்கல் வரையிலான இரண்டாவது ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில், அதை ஆய்வு செய்வதற்காகவும், பின்னர் சோதனை ரெயில் ஓட்டம் நடத்துவதற்காகவும் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மணப்பாறை வந்தார்.

டிராலியில் சென்று ஆய்வு

சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, மணப்பாறை 60 அடி பாலம் அருகே இருந்து கல்பட்டி சத்திரம் ரெயில் நிலையம் வரை டிராலியை இயக்கி சோதனை செய்தனர். அதன்படி முதல் டிராலியில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் அமர்ந்து சென்றனர். இதைத்தொடர்ந்து 7 டிராலிகளில் அதிகாரிகள், ரெயில்வே பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வந்தனர்.

பல்வேறு இடங்களிலும் ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள் எவ்வளவு?, குறிப்பிட்ட இடைவெளியில் சிமெண்டு சிலாப் போடப்பட்டுள்ளதா? என்றும் பாலங்கள் உள்ளிட்டவற்றையும் ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார். வையம்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரெயில்நிலைய கட்டிடங்களை திறந்து வைத்து தொடர்ந்து டிராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சோதனை ஓட்டம்

டிராலியில் சோதனை ஓட்டம் நிறைவுற்ற நிலையில் மாலையில் கல்பட்டிசத்திரம் முதல் செட்டியபட்டி ரெயில்நிலையம் வரை ரெயில் என்ஜின் மூலம் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்றும் தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்த ரெயில் கல்பட்டி சத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து செட்டியபட்டி ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குவாதம்

இதற்கிடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக நிலம் கையப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அவர்கள் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளின் டிராலி முன் நின்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த ரெயில்வே அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதில் ரெயில்வே அதிகாரி ஒருவர், கையகப்படுத்தப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமானது. உங்களுக்கு ஏன் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியதால் அங்கிருந்த சிலர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story