திருப்பூர் மாவட்டத்தில் 2–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: கோடி வர்த்தகம் பாதிப்பு


திருப்பூர் மாவட்டத்தில் 2–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்: கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 1 April 2017 4:45 AM IST (Updated: 1 April 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 2–வது நாளாக நேற்று லாரிகள் வேலைநிறுத்தம் நடந்தது. இதனால் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

லாரிகளுக்கு இன்சூரன்சு தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு போன்றவற்றை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் பங்கேற்றுள்ளனர். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் ஆடைகள் வெளிமாநிலங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பின்னலாடைகள் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பனியன் நிறுவனங்களில் பண்டல், பண்டல்களாக சரக்குகள் தேங்கி கிடக்கிறது. இதுபோல் அனுப்பர்பாளையம் பகுதியில் உற்பத்தியாகும் பாத்திரங்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது.

ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

மேலும் காங்கேயம் பகுதியில் இருந்து எண்ணெய், அரிசி, தேங்காய் கொப்பரை, உடுமலை பகுதிகளில் இருந்து தேங்காய் மற்றும் காய்கறிகளை வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 40 ஆயிரம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். இதனால் நாளொன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் பனியன் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளதால் பனியன் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். அவசரமாக அனுப்ப வேண்டிய சரக்குகளை ரெயில்கள் மூலமாக அனுப்பி வைக்கிறார்கள். இதன்காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் சரக்குகள் மூடை, மூடையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2–வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்ததால் ரூ.200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகளின் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோழித்தீவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூரில் ரெயிலில் அனுப்பி வைக்கப்படும் சரக்குகளை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல்லடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. கோழிப்பண்ணைகளுக்கு தீவன மூடைகள் சரக்கு ரெயிலில் ஏற்றப்பட்டு திருப்பூருக்கு நேற்று வந்து சேர்ந்தன. ஆனால் கூட்ஷெட்டில் உள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் கோழித்தீவன மூடைகளை இறக்க முடியாமல் ரெயிலிலேயே இருந்தன. தீவனம் இல்லாமல் கறிக்கோழிகள் இறந்து விடும் நிலை ஏற்படும் என்பதால் கோழித்தீவன மூடைகளை மட்டும் லாரிகளில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து கோழித்தீவன மூடைகள் மட்டும் 80 லாரிகளில் ஏற்றி பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள பண்ணைகளுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமியிடம் கேட்டபோது, ‘தீவனம் இல்லாமல் கோழிகள் இறந்து விடும் என்று கேட்டுக்கொண்டதால் தீவன மூடைகள் லாரிகளில் ஏற்றி கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்கிறது’ என்றார்.


Next Story