பாலித்தீன் கழிவுகளை தரம் பிரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்
மடத்துக்குளம் அருகே பாலித்தீன் கழிவுகளை தரம் பிரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
மடத்துக்குளம்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை ஒன்று இருந்தது. அரிசி ஆலை தற்போது செயல்படாததால் அந்த இந்த இடம் காலியாக இருந்தது.
இந்த நிலையில் அந்த இடத்தை கேரள மாநிலம் பறவூர் பகுதியை சேர்ந்த லுஜூ என்பவர் வாடகைக்கு எடுத்து அங்கு பழைய பாலித்தீன் கழிவுகளை தரம் பிரித்து கேரளாவுக்கு மறு சுழற்சிக்காக அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வந்தார். டன் கணக்கில் கழிவு பாலித்தீன் கவர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
கட்டிடங்கள் இடிப்புஇந்த நிலையில் நேற்றுகாலை கட்டிடத்துக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் கவர்களில் திடீரென்று தீப்பிடித்தது. காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கரும்புகையுடன் எரியத்தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உடுமலை மற்றும் பழனி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உடுமலை மற்றும் பழனியிலிருந்து 2 தீயணைப்பு வண்டிகள் கொண்டு வரப்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர். ஆனால் பல மணி நேரம் போராடியும் பாலித்தீன் கழிவுகளில் தொடர்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. பாலித்தீன் கழிவுகள் பலமணி நேரம் தொடர்ந்து எரிந்ததால் ஏற்பட்ட கரும்புகையால் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தலைவலி, மூச்சுத்திணறல் ஆகிய தொந்தரவுகள் ஏற்பட்டது.
ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்தீ விபத்து குறித்து கட்டிட உரிமையாளர் கதிர்வேல் கூறுகையில் “கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் செலுத்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கும் நிறுவனத்தாரை இடத்தை காலி செய்து தருமாறு கேட்டிருந்தோம். நேற்று தரம் பிரிக்கப்பட்ட பாலித்தீன் பைகளை கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக எடுத்து செல்லமுடியவில்லை. தீயில் எரிந்து சேதமடைந்துள்ள பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனத்தெரிகிறது. மேலும் கட்டிடம் முழுமையாக தீ விபத்தில் சேதமடைந்துவிட்டது“ என்று அவர் தெரிவித்தார்.