பாறைக்கால்மடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


பாறைக்கால்மடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2017 5:00 AM IST (Updated: 1 April 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

பாறைக்கால்மடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. அப்போது பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்த பாதாள சாக்கடை வழியாக வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வலம்புரிவிளையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நகரில் சில இடங்களில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாறைக்கால்மடம் பகுதியிலும் ஒரு கழிவு நீரேற்று நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கழிவுநீரை சேமிக்க அங்கு 30 அடி ஆழத்தில் ஒரு பெரிய குழி தோண்டப்பட்டு வருகிறது. மேலும் 2 குழிகள் தோண்டுவதற்கான பணிகள் நடக்க உள்ளன. இந்த நிலையில் பாறைக்கால்மடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பணிகளை தடுத்தனர்

மேலும் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வரும் இடத்தில் பூங்கா உருவாக்கப்பட இருப்பதாக கூறி மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். மேலும், கழிவு நீரேற்று நிலையம் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 100 அல்லது 500 மீட்டருக்கு அப்பால்தான் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டு பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ், அனில்குமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து அதிவிரைவு படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

போராட்டம்

இதற்கிடையே நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அன்பரசு மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது, குடியிருப்பு பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பது தொடர்பாக விளக்கமளிக்கும்படி நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அதே இடத்தில் ஏராளமான பெண்களும், ஆண்களும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார்கள். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

பாதிப்பு ஏற்படாது...

இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பாறைக்கால்மடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தான், குடியிருப்பு பகுதியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க அதுபோன்று விதிமுறைகள் கிடையாது. மேலும் கழிவு நீரேற்று நிலையத்தால் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது‘ என்றனர்.


Next Story