திருவட்டார் அருகே மாயமான பெண் எரித்துக்கொலை
திருவட்டார் அருகே மாயமான பெண் கொலை? கணவன்-மனைவியை பிடித்து போலீஸ் விசாரணை
திருவட்டார்,
திருவட்டார் அருகே மாயமான பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்னொரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
பெண் மாயம்திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்தவர் இன்னசென்ட் (வயது 42), தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 25–ந்தேதி காலை சசிகலா வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதைத்தொடர்ந்து இன்னசென்ட், மனைவியை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி அவர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
எரித்துக்கொலைஅப்போது சசிகலாவுக்கு நாகர்கோவிலை சேர்ந்த கலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, தோழி போல் பழகி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கலாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வந்தார்.
ஒருமுறை சசிகலா நாகர்கோவிலில் பிணமாக கிடப்பதாக கூறினார். அங்கு சென்று பார்த்த போது அப்படி பிணம் எதுவும் இல்லை. மேலும் விசாரணை நடத்திய போது நெல்லை மாவட்டம் திசையன்விளை சுடுகாட்டில் வைத்து சசிகலா எரித்து கொலை செய்யப்பட்டார் என்றார். அதைத்தொடர்ந்து கலாவை போலீசார் அங்கு அழைத்து சென்றனர். அப்போது திசையன்விளை சுடுகாட்டில் சசிகலா பிணத்தை கலா அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.
கலாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.