காங்கிரஸ் அரசை குறைகூற ரங்கசாமிக்கு தகுதியில்லை அமைச்சர் கந்தசாமி ஆவேசம்


காங்கிரஸ் அரசை குறைகூற ரங்கசாமிக்கு தகுதியில்லை அமைச்சர் கந்தசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காங்கிரஸ் அரசை குறைகூற ரங்கசாமிக்கு தகுதியில்லை என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் 2016–17ம் நிதியாண்டிற்கான துணை கொடைகளுக்கான கோரிக்கைகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தபோது நடந்த விவாதம் வருமாறு:–

நிதி நெருக்கடி

அன்பழகன் (அ.தி.மு.க.):– புதுவையில் தனிக்கணக்கு தொடங்கிய பின்புதான் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த தனிக்கணக்கினை தொடங்கியது காங்கிரஸ் அரசுதான். இப்போது நீங்கள் பலமுறை டெல்லி சென்று வந்துள்ளீர்கள். மத்திய அரசு எவ்வளவுதான் நிதி தந்தது?

முதல்–அமைச்சர் நாராயணசாமி:– மத்திய அரசிடம் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி கேட்டுள்ளோம். நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசும் வறட்சி நிவாரணமாக ரூ.39 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.1,700 கோடிதான் தந்துள்ளது.

அன்பழகன்:– நீங்கள் வறட்சி நிவாரணமாக கொஞ்சங்கூட நிதி வாங்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? 8 மாதமாக இலவச அரிசி போடவில்லை. அதற்கான தொகை எங்கே போனது? அதை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டியதுதானே? குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகட்ட ஒருவருக்குகூட பணம் கொடுக்கவில்லை.

குறைகூற தகுதியில்லை

அமைச்சர் கந்தசாமி:– கடந்த கால ஆட்சியாளர்கள் கொடுக்காமல் சென்ற 3 மாதத்துக்கான அரிசியையும் நாங்கள்தான் வழங்கினோம். மத்திய அரசு நிறுவனம் அரிசி வழங்க காலதாமதம் ஏற்பட்டதால் சிறிது பிரச்சினை ஏற்பட்டது. இப்போது பிரித்து பிரித்து அரிசி கொள்முதல் செய்கிறோம். இனி தொடர்ந்து தாமதமின்றி அரிசி வழங்குவோம். புதுவை சட்டமன்ற கூட்டத்தை 3 நிமிடங்கள் நடத்தியவர் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. அவர் சட்டமன்றத்துக்கு வெளியே அரசைப்பற்றி குறைகூறி உள்ளார். காங்கிரஸ் அரசைப்பற்றி குறைகூற அவருக்கு தகுதியில்லை.

கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க யார் காரணம்? அளவுக்கு அதிகமாக ஆட்களை அவர்தான் நியமித்தார். 515 பேர் வேலைநிறுத்தத்தில் இருந்த காலத்தில் பாப்ஸ்கோ நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளது. அதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க நாம் ஒட்டுமொத்தமாக பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

கவர்னர் தடுக்கிறார்

மத்திய அரசிடம் நிதி பெற முதல்–அமைச்சர் டெல்லி சென்று பேசி வருகிறார். ஆனால் கவர்னர் அதை தடுக்கிறார். தமிழகத்தில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் பேசியும் நிதி கிடைக்கவில்லை. இங்கும் ஒரு எம்.பி. இருக்கிறார். அவரும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார்.

(அமைச்சர் கந்தசாமியின் கருத்துக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் சென்றார்.)


Next Story