மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றி திறக்கக்கூடாது பொதுமக்கள் வலியுறுத்தல்


மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்றி திறக்கக்கூடாது பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 April 2017 4:00 AM IST (Updated: 1 April 2017 6:42 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் தீவு பகுதியில் மொத்தம் உள்ள 11 மதுபான கடைகளில் 9 கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு பகுதியில் மொத்தம் உள்ள 11 மதுபான கடைகளில் 9 கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. பாம்பனில் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்ததால் 2 மதுபான கடைகள் மூடப்படவில்லை. இதனால் இந்த மதுக்கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் நெடுஞ்சாலையில் இருந்த மதுபானக்கடைகள் மூடப்பட்டதற்கு ராமேசுவரம் பகுதி பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறுஇடத்துக்கு மாற்றி திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ராமேசுவரத்தை சேர்ந்த குடும்பத்தலைவி சுகன்யா கூறியதாவது:– தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு ராமேசுவரம் பகுதியை சேர்ந்த அனைத்து பெண்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம். இந்த உத்தரவால் புண்ணிய தலமான ராமேசுவரத்தில் தற்போது ஒரு மதுபான கடை கூட இல்லாத ஒரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது. மதுபான கடைகளால் தான் குடும்பத்தில் கணவன்–மனைவி இடையே பிரச்சினை, குடும்பச் சண்டை அதிகமாக வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூடினால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மோகன் கூறியதாவது:–

தமிழகத்தில் நெடுஞ்சாலை பகுதியில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டதால் வாகன விபத்துகள் முழுமையாக குறையும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அரசு முழுமையாக செயல்படுத்துவதோடு மூடப்பட்ட கடைகளை வேறு இடத்துக்கு மாற்றி மீண்டும் திறக்கக்கூடாது. தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் நிரந்தமாக மூடுவதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி மதுவில்லா நல்ல தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story