டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்
ஆறுமுகநேரியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஆறுமுகநேரி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்படி ஆறுமுகநேரி மெயின் பஜாரில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அந்த கடையை ஆறுமுகநேரி– அடைக்கலாபுரம் ரோடு முத்துகிருஷ்ணாபுரத்தில் இடமாற்றம் செய்ய நேற்று முன்தினம் இரவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு முத்துகிருஷ்ணாபுரம், காமராஜர்புரம், ராஜமன்யபுரம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, இரவில் கிறிஸ்தவ ஆலய மணியை அடித்து திரண்டனர். பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆறுமுகநேரியில் நேற்று எந்த இடத்திலும் டாஸ்மாக் கடை திறக்கப்படாததால், பெரும்பாலானவர்கள் பக்கத்து ஊர்களுக்கு சென்று மது வாங்கி குடித்தனர். காயல்பட்டினத்தைப் போன்று ஆறுமுகநேரியிலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதாகவும், இது தொடர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.