வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை பா.ம.க.வினர் முற்றுகை


வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை பா.ம.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 2 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 8:50 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர்.

வந்தவாசி,

வந்தவாசி தாலுகா தெள்ளாரில் தேசூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதற்கு சற்று தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம், கோவில்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் அரசு துறையினருக்கு மனுக்களை அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் டாஸ்மாக் கடையை திறக்க மேற்பார்வையாளர் சீனிவாசன், விற்பனையாளர்கள் அண்ணாதுரை, வேலு ஆகியோர் வந்தனர். அவர்கள் அங்கு வந்தபோது, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் எ.வ.முருகன், பசுமை தாயக மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள் சக்திவேல், மணவாளன், மாவட்ட துணைத்தலைவர் பொன்.அரிக்கிருஷ்ணன் மற்றும் பெண்கள் ஏராளமானோர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையை முற்றுகையிட்டனர்.

2 மணி நேரம்...

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் எஸ்.முருகன், தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரப்பன், சப் – இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு, பிற்பகல் 2 மணி அளவில் கடை திறக்கப்பட்டது.


Next Story