காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல் மெயின் அருவி வறண்டது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி வறண்டது.
பென்னாகரம்,
சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்த பின்னர் மெயின் அருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
இந்தநிலையில் பருவமழை பொய்த்து போனதால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து குறையத்தொடங்கியது. இதனால் கரைபுரண்டு ஓடிய காவிரி ஆறு வறண்டது. ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவிகள் வெறும் பாறைகளாக காட்சி அளித்தது. சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறையத்தொடங்கியதால் சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக குறைந்ததால் மெயின் அருவிக்கு தண்ணீர் வரும் பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சுற்றுலா பயணிகள் குளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவி தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் அந்த பகுதி பாறைகளாக காட்சி அளிக்கிறது.
ஒகேனக்கல்லில் பாறைகளுக்கு இடையே பெருக்கெடுத்து ஓடும் பகுதியில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோடை விடுமுறைக்கு முன்பே ஒகேனக்கல் காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.