ஓமலூர் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்
ஓமலூர் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமலூர்,
ஓமலூர் அருகே காமலாபுரம் பிரிவு ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையை பொட்டியபுரம் ஊராட்சி ரங்கன் பூசாரி காட்டுவளவு பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன் டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க ரங்கன் பூசாரி காட்டுவளவு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் சம்பத்திடம் புகார் கொடுத்தனர்.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து காமலாபுரம் பிரிவு ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ரங்கன்பூசாரி காட்டுவளவு குடியிருப்பு பகுதிக்கு இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப்படுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. அதையொட்டி பொதுமக்கள் நேற்று முன் தினம் இரவு முதல் அங்கு கூடி இருந்தனர்.
தர்ணா போராட்டம்இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மதுபானங்களை ஏற்றி வரும் வாகனத்தை சிறைபிடிப்போம் என்று கூறியும் நேற்று பொதுமக்கள் பொட்டியபுரம் ஆசாரிபட்டறையில் இருந்து ரங்கன் பூசாரி காட்டுவளவு செல்லும் ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.