மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 145 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன பொதுமக்கள் வரவேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 145 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
விழுப்புரம்,
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடுமாறு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,400 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 145 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. இவற்றுடன் 6 தனியார் பார்களும் மூடப்பட்டது. இந்த கடைகளின் கதவுகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த கடை மூடப்படுகிறது என நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது.
மதுப்பிரியர்கள் ஏமாற்றம்நீதிமன்ற உத்தரவினால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் நேற்று பகல் 12 மணிக்கு மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடைக்கு வந்தனர். கடைகள் மூடப்பட்டிருந்ததால் அவர்கள் மது வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால் அவர்கள் புதுச்சேரி மாநில எல்லைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 287 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23 டாஸ்மாக் கடைகளும், கடந்த பிப்ரவரி மாதம் 18 கடைகளும் மூடப்பட்டன. மீதம் 246 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இவற்றில் ஒரு சில இடங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் நிர்வாக காரணங்கள் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு 8 கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று (நேற்று) மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 145 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது 93 டாஸ்மாக் கடைகள் மட்டுமே உள்ளன. இப்போது மூடப்பட்ட 145 கடைகளுக்கும் பதிலாக புதிய இடம் தேர்வு செய்யும் முயற்சி நடந்து வருகிறது என்றார்.
பொதுமக்கள் வரவேற்புடாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறித்து விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ. குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராமதிலகம் கூறுகையில், டாஸ்மாக் கடைகளுக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது. டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி பல இடங்களில் போராட்டமும் நடத்தினார்கள். ஆனால் அரசு அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தற்போது உத்தரவு கொடுத்து அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. விழுப்புரம் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் டாஸ்மாக் கடைகள் இருந்தன. குறிப்பாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் இருந்த டாஸ்மாக் கடைகளால் பெண்களுக்கு மிகவும் அச்சமாக இருந்தது. மது குடித்துவிட்டு பஸ் நிலையத்திலேயே குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால் மிகவும் அச்சமாக இருந்தது. தற்போது அந்த நிலை இல்லாமல் நிம்மதியாக உள்ளது. விரைவில் நகரில் இருக்கிற ஒன்றிரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்றார்.
திண்டிவனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பரந்தாமன் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்த 145 டாஸ்மாக் கடைகள் ஒரே நாளில் மூடப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இது வளரும் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டுதலாகவும் இருக்கும். சாலையிலேயே நின்று மது குடிப்பதை பார்த்து இளைஞர்களும் சீரழிந்து வந்தனர். ஊருக்குஒதுக்குப்புறமாக கடைகளை கொண்டு செல்வதால் யாருக்கும் தொந்தரவு இருக்காது. கடைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால் முற்றிலும் மூடக்கூடாது. அவ்வாறு மூடினால் கள்ளச்சாராய விற்பனை பெருகும். இதன் மூலம் சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகமாகும் என்றார்.