மாவட்டத்தில் முதற்கட்டமாக 20 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு இன்று முதல் வழங்கப்படும்
கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 20 ஆயிரத்து 564 குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு
கடலூர்,
நடைமுறையில் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் ஏப்ரல் 1–ந் தேதி தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் முதற்கட்டமாக கடலூர் தாலுகாவில் 20 ஆயிரத்து 564 குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைகேட்பு கூட்ட அரங்கில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
கடலூர் தாலுகாவில்...கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 6½ லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இதில் 3 லட்சத்து 71 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை முழுமையாக ரேஷன்கடை விற்பனை எந்திரத்தில் பதிவு செய்துள்ளனர். அதேபோல் 83 சதவீதம் பேர் தங்கள் செல்போன் எண்ணையும் பதிவு செய்துள்ளனர்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக கடலூர் தாலுகாவில் மொத்தமுள்ள 1 லட்சத்து 7 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களில் 20 ஆயிரத்து 564 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக மற்ற தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
இது குறித்து மாவட்ட வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
முழுமையான பதிவுஆதார் எண்ணை முழுமையாக பதிவு செய்த குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு முதலில் வழங்கப்படும். அதாவது ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒருவர், அதற்கு மேற்பட்டவர்கள் 4 பேர் இருப்பதாக வைத்துக்கொண்டால், குழந்தையை தவிர மற்ற 4 பேரின் ஆதார் எண்ணும் ரேஷன் கடையில் பதிவு செய்து இருந்ததால் தான் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும். எனவே ஆதார் எண்ணை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.
ரகசிய குறியீடு எண்ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயார் ஆனதும், அதுபற்றி செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரருக்கு தகவல் அனுப்பப்படும். அதில் ரகசிய குறியீடு எண்ணும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த எண்ணை ரேஷன் கடைக்கு கொண்டு சென்று விற்பனையாளரிடம் காண்பித்து ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் வரை பழைய ரேஷன் கார்டை கொண்டு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.