சாணார்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


சாணார்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 April 2017 4:45 AM IST (Updated: 2 April 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோபால்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கம்பிளியம்பட்டி ஊராட்சி அம்மாபட்டி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதையடுத்து அம்மாபட்டியில் உள்ள 3 ஆழ்துளை கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டன. இதனால் கடந்த 6 மாதங்களாக அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி அடைந்து வந்தனர்.

சாலை மறியல்

மேலும் நிலப்பட்டி அருகே உள்ள சின்னம்பட்டிக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் அம்மாபட்டி மக்கள் பலமுறை புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை சிலுவத்தூர்–செங்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் வடமதுரை போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஓரிரு நாட்களில் அம்மாபட்டியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேடசந்தூர்

இதே போல் வேடசந்தூர் அருகே உள்ள பாலப்பட்டி ஊராட்சி வள்ளிபட்டி ஆதிதிராவிடர் காலனி, புதுமாரப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரே, குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) பழுது ஏற்பட்டதால் ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின்மோட்டாருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மின்மாற்றி பழுதானது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மின்சாரத்துறை அதிகாரிகள் பழுதான மின்மாற்றியை சீரமைத்தனர்.

அதன் பின்னர் புதுமாரப்பன்பட்டிக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. வள்ளிப்பட்டி காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வள்ளிப்பட்டி பகுதி மக்கள் நேற்று காலை வேடசந்தூர்–கரூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கூம்பூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story