நீலகிரி மாவட்டத்தில் 29 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன
நீலகிரி மாவட்டத்தில் 29 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி,
தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரும் விதமாக முதற்கட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் டாஸ்மாக் மதுக்கடைகளின் பணி நேரத்தையும் குறைத்தார். இதன்படி நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த 134 மதுக்கடைகளில் 31 கடைகள் மூடப்பட்டு 103 கடைகள் செயல்பட்டு வந்தன.
இதனை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு முன்பு 2–வது கட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன்காரணமாக நீலகிரியில் இயங்கி வந்த 10 கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து 93 கடைகள் இயங்கி வந்தன.
இந்த நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இயங்கி வரும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், இந்த கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வைத்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர்.
29 மதுக்கடைகள் மூடப்பட்டனஇந்த உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இயங்கி வந்த 16 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலையோரத்தில் செயல்பட்ட 13 மதுக்கடைகளும் என மொத்தம் 29 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது நீலகிரியில் 64 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.