புதுவையில் போலீஸ் அதிரடி: வெடிபொருட்களுடன் பிரபல ரவுடி கைது
புதுவையில் வெடிபொருட்களுடன் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்க அவர் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருவடிக்குப்பம் சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்த முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி டிராக் சிவாவை (வயது 30) பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை போட்டனர். அதில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான வெடிமருந்து, இரும்பு ஆணிகள், கூழாங்கற்கள் ஆகியவை இருந்தன.
தொழிலதிபர்களிடம் பணம் பறிக்க திட்டம்இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் தனக்கு எதிரிகளால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க வெடிகுண்டுகள் தயாரித்து அவர்களை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்க அவர் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிராக் சிவாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெடிமருந்து, இரும்பு ஆணிகள், கூழாங்கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன. 11 ஆயிரம் ரொக்க பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜாமீனில் வந்தவர்கைது செய்யப்பட்ட ரவுடி டிராக் சிவா மீது ஏற்கனவே கொலை, வெடிகுண்டு வீச்சு, தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் டிராக் சிவா ஜாமீனில் வெளியே வந்தார். இந்தநிலையில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.