தட்டச்சு நிலையத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற 8 பேர் கைது
தட்டச்சு நிலையத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற 8 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி,
புதுச்சேரியில் தட்டச்சு நிலையத்தில் போலி ஆவணங்கள், சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். தட்டச்சு எந்திரம், மடிக்கணினிகள், கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவல்புதுச்சேரி காந்திவீதி–ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் உள்ள தட்டச்சு நிலையத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபடுவதாக பெரியகடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பெரியகடை இன்ஸ்பெக்டர் செல்வம், புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சிவப்பிரகாசம், முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் சான்றிதழ் வாங்குவது போல் அந்த கடைக்கு சென்று கண்காணித்தனர். தங்களுக்கு வந்த தகவலின்படி போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததை உறுதிபடுத்தினர்.
அதிரடி சோதனைஇதைத்தொடர்ந்து அவர்கள் தட்டச்சு நிலையத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அங்கு இருந்த போலி ஆதார் கார்டு, சொத்து பத்திரங்கள், பல்கலைக்கழக சான்றிதழ்கள், பிளஸ்–2 சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், நீதிமன்ற தீர்ப்பு நகல் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள், மடிக்கணினி, தட்டச்சு எந்திரம், ஸ்கேனர், ரப்பர் ஸ்டாம்புகள் ஆகிய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து தட்டச்சு நிலையத்தை நடத்தி வரும் அரும்பார்த்தபுரம் டி.என்.பாளையம் ஆயில்மில் ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தூர்சாமி (வயது53) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த பல ஆண்டுகளாக போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் 7 பேர் சிக்கினர்விசாரணையில் செந்தூர்சாமி கொடுத்த தகவலின்பேரில் அவருடக்கு உடந்தையாக இருந்த முத்தியால்பேட்டை டி.பி. தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி (40), குறிஞ்சி நகர் டேனியல் (53), சுல்தான்பேட் அண்ணா தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் (41), உழவர்கரை சிவசக்தி நகர் மோகன் (46), லாஸ்பேட்டை ராமன் நகர் அய்யப்பன் (39), லாஸ்பேட்டை அசோக் நகர் பிரான்சிஸ் (54), திலாசுப்பேட்டை சுந்தரலிங்கம் (42) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது:–
மிரட்டி மோசடிபுதுவையில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து பத்திரங்கள், உயர் நீதிமன்ற தீர்ப்பு, நீதிமன்ற ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் என பல்வேறு போலியான சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். வெளிநாடுகளில் வாழும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களை போலி பத்திரங்கள் தயாரித்து அபகரிப்பது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களிடம் போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்திய அரசு ஸ்டாம்புகள் உள்ளிட்ட 277 ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
காவலில் விசாரிக்க முடிவுபோலீசாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையின்போது எவ்வளவு சான்றுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. யார்? யாருக்கு என்ன சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன? என்பன உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல் தெரியவரும்.