ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
x
தினத்தந்தி 2 April 2017 4:00 AM IST (Updated: 2 April 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அவருடைய கணவர் மாதவன் கூறினார்.

தஞ்சாவூர்,

புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்த ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சந்திரஹாசன் முன்னிலை வகித்தார். ராஜ்குமார் வரவேற்றார். மிலிட்டரி வேலாயுதம் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விவசாயிகளின் குறைகளை தீர்க்க மாநில நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும். நீர்வளத்தை பாதுகாக்க சீமைக்கருவேல மரங்கள் வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றச்செயல் என்று அறிவிக்க வேண்டும். ராணுவத்திற்கு எத்தகைய சலுகை உள்ளதோ? அதே சலுகையை விவசாய குடும்பத்திற்கும் வழங்க வேண்டும்.

அரசு வேலை

1 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்போருக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு பஸ்களில் விவசாயிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய கடன் என்று கொடுக்காமல் 1 ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். வேப்பமரத்தின் விதைகளை விமானம் மூலம் அரசு தூவ வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் நளினி நன்றி கூறினார்.

விவசாயிகளுக்கு ஆதரவு

முன்னதாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 5-வது நாளாக தொடர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஜெ.தீபா மாதவன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு எங்களது இயக்கம் தோளோடு, தோளாக இருக்கும். ஆளும் கட்சி ஆர்.கே.நகருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்து இருந்தால் இந்த போராட்டம் நடந்து இருக்காது. ஜெ.தீபாவுக்கு நான் என்றைக்கும் ஆதரவாக இருப்பேன். அவரது பேரவையில் நான் அங்கமாக இருந்தது இல்லை. விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடன் வழங்க வேண்டும். விதைநெல், பூச்சி மருந்து, உரம் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் பாலைவனம் ஆகி விடும். ஆர்.கே.நகரில் தீபா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தீய சக்திகளுக்கு ஆர்.கே.நகர் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தீய சக்திகள் யார் என்பதை நான் விரைவில் தெரிவிப்பேன். அது மக்களுக்கு தெரியும். தீபா தொடங்கியது பேரவை. நான் தொடங்கியது கழகம். ஜெ.தீபாவை எதிர்த்து நான் போட்டியிடவில்லை. அவருடைய வெற்றி தான் எனக்கு முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story