ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 April 2017 4:30 AM IST (Updated: 2 April 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கும் பணியை கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் பழைய ரேஷன்கார்டுகளுக்கு மாற்றாக, ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கும் பணி திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி கலந்து கொண்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் தற்போது திருச்சி கிழக்கு வட்டத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 364 ரேஷன் கார்டுகளும், திருச்சி மேற்கு வட்டத்தில் 83 ஆயிரத்து 112 ரேஷன் கார்டுகளும், லால்குடி வட்டத்தில் 76 ஆயிரத்து 256 ரேஷன் கார்டுகளும், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 55 ஆயிரத்து 752 ரேஷன் கார்டுகளும், ஸ்ரீரங்கம் வட்டத்தில் 88 ஆயிரத்து 973 ரேஷன்கார்டுகளும், முசிறி வட்டத்தில் 68 ஆயிரத்து 382 ரேஷன்கார்டுகளும், தொட்டியம் வட்டத்தில் 40 ஆயிரத்து 373 ரேஷன்கார்டுகளும், துறையூர் வட்டத்தில் 76 ஆயிரத்து 811 ரேஷன்கார்டுகளும், மணப்பாறை வட்டத்தில் 65 ஆயிரத்து 172 ரேஷன்கார்டுகளும், மருங்காபுரி வட்டத்தில் 33 ஆயிரத்து 626 ரேஷன்கார்டுகளும் உள்ளன.

குறுஞ்செய்தி

தற்போது முதற்கட்டமாக அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ள ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளுக்கு, அவர்கள் ஏற்கனவே ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் எட்டு இலக்க எண் வழங்கப்படும். அந்த குறுஞ்செய்தியில் பெறப்பட்ட எட்டு இலக்க எண்ணை விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்து பின்பு ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே தங்கள் அலைபேசிக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியை புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு பெற உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். தங்கள் அலைப்பேசிக்கு அனுப்பப்பட்ட எட்டு இலக்க எண் 7 நாட்களுக்கு செல்லுபடியாகும். எனவே பொதுமக்கள் ஒரே நேரத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளை பெறும் இடத்திற்கு வருவதை தவிர்க்கவும், பொதுமக்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்ததும், பழைய ரேஷன்கார்டுகளை ஒப்படைத்து விட்டு புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

பொது இ-சேவை மையத்தில்

குறுஞ்செய்தி வரப்பெறாதவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கப்படும். அதற்கான குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்படும். அதுவரையில் தங்களது பழைய ரேஷன்கார்டுகளையே பயன்படுத்தி ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டை முகவரி சான்றாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டை வேறுயாரும் பயன்படுத்த முடியாது. இந்த அட்டை மிகவும் பாதுகாப்பானது.

மேலும் புதிய கார்டை விண்ணப்பிக்க, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கடை மாற்றம், பிழை திருத்தம் மற்றும் புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு காணாமல் போனால் நகல் கார்டு பெறுதல் போன்ற வற்றுக் காக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வரத்தேவையில்லை. பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள பொது இ-சேவை மையத்தை அணுகி தங்களது கோரிக்கைகளை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, திருச்சி கிழக்கு தாசில்தார் சத்தியமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story