திருச்சியில் விவசாய சங்கத்தினர்- மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்


திருச்சியில் விவசாய சங்கத்தினர்- மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 April 2017 4:30 AM IST (Updated: 2 April 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாய சங்கத்தினர் மற்றும் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மலைக்கோட்டை,

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகள் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி முழு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரிநீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திநேற்று மாலை திருச்சி மாவட்ட விவசாயிகள் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவ.சூரியன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் புலியூர் நாகராஜன், ம.பா.சின்னதுரை, சிதம்பரம், தீட்சிதர் பாலசுப்பிரமணியன், கவுண்டம்பட்டி சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்.

எச்.ராஜா உருவப்படத்தை கிழித்தனர்

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி, கொள்ளிடத்தில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

பின்னர் தமிழக விவசாயிகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணுவை தரக்குறைவாக பேசியதாக கூறி பா.ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜாவின் உருவப் படத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர்கள் கணேசமூர்த்தி, கருப்பண்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story