4¼ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கலெக்டர் தகவல்


4¼ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 April 2017 4:00 AM IST (Updated: 2 April 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 372 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

இலுப்பூர்,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா ராப்பூசல் ஊராட்சி கலிங்கப்பட்டியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு பொது வினியோகத் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் புதிதாக ஸ்மார்ட் கார்டு எனும் மின்னணு குடும்ப அட்டை வழங்க முடிவு செய்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு இந்த பணி 99 சதவீதம் நிறைவு செய்து, இதில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க உத்தரவிட்டு உள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலிங்கப்பட்டியில் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது.

குறுந்தகவல்

மேலும் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 27 ஆயிரத்து 372 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக 27 ஆயிரத்து 706 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும். மேலும், ஆதார் எண்கள் இணைக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள், கூடவே தங்களது செல்போன் எண்ணையும் இணைத்து உள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்பட்டதற்கான குறுந்தகவல் பெறப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பொது மக்கள் பெற்று கொள்ளலாம்.

மேலும் புதிய ரேஷன்கார்டு வேண்டுவோர் இணையதளத்தில் அரசு இ-சேவை மூலம் பதிவு செய்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு, மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் சின்னத்தம்பி, தாசில்தார் தமிழ்மணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story