சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 125 பேர் கைது


சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 125 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2017 3:45 AM IST (Updated: 2 April 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

திருமாந்துறை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 125 பேர் கைது

மங்களமேடு,

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் மூடக்கோரி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்து இருந்தார்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று அந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு கடலூர் மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ராஜன், அரியலூர் மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ரெங்க சுரேந்தர், வெங்கடாசலம், ராகவன், நகர செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார், முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட 125 பேரை கைது செய்து பெரம்பலூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த முற்றுகை போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story