பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடக்கம்


பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 2 April 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு (மின்னணு குடும்ப அட்டை) வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) துரை ஆகியோர் கலந்துகொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினர்.

பின்னர் துரை கூறிய தாவது:-

1 லட்சத்து 71 ஆயிரத்து 373 ரேஷன் கார்டுகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி இன்று (நேற்று) தொடங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் முழுநேரமாக 201 ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 81 ரேஷன் கடைகளும் என மொத்தம் 282 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 373 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 48 ஆயிரத்து 998 ரேஷன் கார்டுகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரப்பெற்றுள்ளன. முதல்கட்டமாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் ரேஷன் கார்டுதார்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. இந்த குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று குறுஞ்செய்தியை அங்குள்ள விற்பனையாளரிடம் காண்பித்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

குறுஞ்செய்தி

ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ள விவரம் மற்றும் பொருட்கள் இருப்பு குறித்து ரேஷன் கார்டுதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருள் வழங்கப்பட்டவுடன் எவ்வளவு பொருள் வழங்கப்பட்டு உள்ளது என்ற தகவலும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து pds 107 என டைப் செய்து 9980904040 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அல்லது 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு துரை கூறினார்.

அதிகாரிகள்

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல துணை மேலாளர் விஜயகுமார், கூட்டுறவு துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணசாமி, பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story