திருக்குறுங்குடியில் வனத்துறையை கண்டித்து பக்தர்கள் முற்றுகை போராட்டம்


திருக்குறுங்குடியில் வனத்துறையை கண்டித்து பக்தர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2017 4:30 AM IST (Updated: 2 April 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்ததால் வனத்துறையினரை கண்டித்து சோதனை சாவடியில் பக்தர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏர்வாடி,


ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மலையில் உள்ள திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இரவில் தங்கி சிறப்பு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து பக்தர்கள், இந்து அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

சமாதான கூட்டம்


இதை தொடர்ந்து சேரன்மகாதேவி உதவி கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் கோவிலில் இரவில் தங்கும் பக்தர்கள் ஜீயர் மடத்திடம் அடையாள அட்டை நகல் சமர்ப்பித்து அனுமதி பெற்று, அதனை வனத்துறையிடம் வழங்க வேண்டும், பகலில் செல்லும் பக்தர்களுக்கு எந்த கட்டுபாடும் கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பக்தர்கள் முற்றுகை


இதற்கிடையே நேற்று சனிக்கிழமை என்பதால் திரளான வெளியூர் பக்தர்கள் திருமலைநம்பி கோவிலுக்கு வந்தனர். வனத்துறை சோதனை சாவடியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அடையாள அட்டை நகல் தந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். கூட்டம் அதிகரித்ததால் சோதனை சாவடி கதவும் மூடப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த பக்தர்கள் சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவிலுக்கு செல்ல அனுமதி


 தகவல் கிடைத்ததும் திருக்குறுங்குடி சப்–இன்ஸ்பெக்டர் ஹரிகுமரன் போலீசாருடன் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பக்தர்கள், உதவி கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான கூட்ட தீர்மானத்திற்கு எதிராக வனத்துறையினர் செயல்படுகின்றனர் என்று சரமாரியாக புகார் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


Next Story