3 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது


3 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 1 April 2017 10:45 PM GMT (Updated: 1 April 2017 8:43 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி 3 மையங்களில் நேற்று தொடங்கியது.

நெல்லை,


10–ம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 8–ந்தேதி தொடங்கி 28–ந்தேதி முடிவடைந்தது. நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 46 ஆயிரத்து 199 மாணவ –மாணவிகள் எழுதினர். தேர்வுகள் முடிவடைந்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்து விடைத்தாள்கள் அனைத்தும் பெறப்பட்டன. பின்னர் அவை வெவ்வேறு மாவட்டங்களுக்கு மதிப்பீடு செய்வதற்காக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி மற்றும் சேரன்மாதேவி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் நெல்லை மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், தென்காசி கல்வி மாவட்டம் சார்பில் தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேரன்மாதேவி கல்வி மாவட்டம் சார்பில் நெல்லை என்.என்.ஹைரோடு சாப்டர் மேல்நிலைப்பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பணி தொடங்கியது


இந்த மையங்களில் விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று தொடங்கியது. தலைமை தேர்வர்கள், உதவி தேர்வர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடைத்தாள்கள் அனைத்தும் வருகிற 15–ந்தேதிக்குள் முழுமையாக திருத்தப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுதவிர பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 5–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் பள்ளி, சின்மயா பள்ளி மற்றும் தென்காசி ஐ.சி.ஐ. பள்ளி ஆகிய 3 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story