காஞ்சீபுரம் அருகே வாலிபர் அடித்துக்கொலை கட்டிட தொழிலாளி கைது
காஞ்சீபுரம் அருகே ரூ.200 கடனை திருப்பித்தராத வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 38). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் தயாளன் (35). கட்டிட தொழிலாளி. ராஜா, தயாளனிடம் ரூ.200 கடன் வாங்கி இருந்தார். பலமுறை கேட்டும் கடனை ராஜா திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தயாளன் தன்னிடம் வாங்கிய கடன் ரூ.200– ஐ திருப்பி தருமாறு ராஜாவிடம் கேட்டார். அப்போது இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களுக்குள் தகராறு முற்றிய நிலையில் எதிர்பாராதவிதமாக தயாளன், ராஜாவின் மூக்கில் பலமாக அடித்தார். இதில் ராஜா பலத்த காயம் அடைந்தார். பின்னர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் ராஜா திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கொலைஇதற்கிடையே தூங்கிய ராஜா நீண்ட நேரம் எழுந்திருக்காததால் ராஜாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இது குறித்து ராஜாவின் மனைவி புஷ்பா பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளி தயாளனை கைது செய்தனர்.
ரூ.200 கடனை திருப்பி தராததால் வாலிபர் ராஜா கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.