மாமல்லபுரத்தில் சுத்தியலால் அடித்து காதலியை கொன்று விட்டு காதலன் தற்கொலை


மாமல்லபுரத்தில் சுத்தியலால் அடித்து காதலியை கொன்று விட்டு காதலன் தற்கொலை
x
தினத்தந்தி 2 April 2017 5:00 AM IST (Updated: 2 April 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் சுத்தியலால் அடித்து காதலியை கொன்று விட்டு காதலன் தற்கொலை வேலை கிடைத்த உடன் காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில், வேலை கிடைத்த உடன் காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காதலன் தனது காதலியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல்

சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ், இவரது மகள் ஜெனிபர்புஷ்பா (வயது 20). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.

செம்மஞ்சேரி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காணிக்கைதாஸ். இவரது மகன் ஜான்மேத்யூ (22). பி.எஸ்.சி. படித்துள்ள இவர், சரியான வேலை கிடைக்காததால் ஒரு இடத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் ஜெனிபர்புஷ்பா பாலவாக்கத்தில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். அதே தேவாலயத்திற்கு ஜான்மேத்யூவும் செல்வார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

காதலிக்க மறுப்பு

இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் ஜெனிபர்புஷ்பாவுக்கு பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

அப்போது காதலனை சந்தித்த ஜெனிபர்புஷ்பா, நீயும் நல்ல வேலைக்கு சென்றால் தான் திருமணத்தை பற்றி எனது பெற்றோரிடம் கூற முடியும். எனவே தொடர்ந்து காதலிக்க முடியாது என்றும், இதோடு பிரிந்து விடுவோம் என்றும் கூறியுள்ளார். வேலை கிடைத்தவுடன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் ஜான்மேத்யூ வேதனை அடைந்தார்.

திடீர் மாயம்

நேற்று முன்தினம் ஜெனிபர் புஷ்பாவுக்கு பிறந்தநாள். இதனால் அவர் புது ஆடை அணிந்து, தோழிகளின் வீடுகளுக்கு சென்று விட்டு மாலையில் வந்து விடுவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் அவர் இரவு வரை வீட்டுக்கு வராததால் அவரது பெற்றோர் தேடத்தொடங்கினர். அப்போது தான், ஜான்மேத்யூசையும் காணவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் இருவரும் எங்காவது ஓடிச்சென்று வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று நினைத்து இரு வீட்டாரும் இரவு முழுவதும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

அப்போது தான் ஜான்மேத்யூவின் நண்பர் ஒருவர், இருவரும் மாமல்லபுரம் சென்று இருப்பதாக கூறினார். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் இருவரையும் தேடிப்பார்த்தனர். மேலும் மாமல்லபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடல்கள் கண்டெடுப்பு

இந்த நிலையில் மாமல்லபுரத்தில் புலிக்குகை அருகே சவுக்குத்தோப்பில் ஒரு மோட்டார் சைக்கிள் அனாதையாக நின்று கொண்டு இருந்தது. அதன் அருகில் ஒரு பெண் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும், உறவினர்களும் அங்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்தது ஜெனிபர்புஷ்பா என்பது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடலின் அருகே ஒரு பரிசு பெட்டியும், ஒரு இரும்பு சுத்தியலும் கிடந்தது.

இதையடுத்து ஜெனிபர்புஷ்பாவுடன் வந்த அவரது காதலனை போலீசார் தேடினர். ஜெனிபர்புஷ்பா உடல் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 200 அடி தொலைவில் உள்ள ஒரு சவுக்கு மரத்தில், சுடிதார் துப்பட்டாவில் தூக்கு மாட்டிய நிலையில் ஜான்மேத்யூ இறந்து கிடந்தார். 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்து விட்டு தற்கொலை

பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காதலியை கொலை செய்து விட்டு ஜான்மேத்யூ தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

வேலை கிடைத்தவுடன் ஜெனிபர்புஷ்பா காதலிக்க மறுத்ததால், அவரை கொலை செய்ய ஜான்மேத்யூ முடிவு செய்து உள்ளார். இதற்காக காதலியை தொடர்பு கொண்ட அவர், உனக்கு பிறந்த நாள் பரிசு தருகிறேன். என்னுடன் கடைசியாக மாமல்லபுரத்தில் வா. அதன்பின்னர் நாம் நமது காதலை முறித்துக்கொள்வோம் என்று நைசாக பேசியுள்ளார். இதனை நம்பி ஜெனிபர்புஷ்பாவும் அவருடன் வர சம்மதம் தெரிவித்துள்ளார்.

சுத்தியலால் அடித்துக்கொலை

பின்னர் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாமல்லபுரம் சென்றனர். அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்தனர். பின்னர் பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி அங்கு புலிக்குகை அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு காதலியை ஜான்மேத்யூ அழைத்து சென்றுள்ளார்.

பிறந்த நாள் பரிசு பெட்டியை ஜான்மேத்யூ திறந்து காட்டியபோது அதில் இரும்பு சுத்தியல் இருந்ததை கண்டு ஜெனிபர்புஷ்பா அதிர்ச்சி அடைந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் ஜான்மேத்யூ காதலியின் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்துள்ளார். இதில் ஜெனிபர்புஷ்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

காதலி இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்ட ஜான்மேத்யூ, ஜெனிபர்புஷ்பா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் அருகில் உள்ள சவுக்கு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை

மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் கிடந்த காதலர்கள் கொண்டு வந்த 2 கைப்பைகள், கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியல் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் சம்பவம் நடந்தபோது புலிக்குகை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியிடமும் போலீசார் விசாரித்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெறுகிறது.


Next Story