சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி: வாலிபர் கைது
சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
தாம்பரம்,
சென்னையை அடுத்த அனகாபுத்தூர் காமராஜர்புரம், கணபதி காலனி 2–வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). இவர், சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் அவர், ‘‘சென்னை வில்லிவாக்கத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் அலுவலகம் நடத்தி வந்த முரளிதரன் என்ற பாண்டியராஜன் (32) என்பவர் எனக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதற்காக அவரிடம் 2 தவணையாக ரூ.2 லட்சம் கொடுத்தேன். ஆனால் சொன்னபடி அவர், எனக்கு வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. என்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார்’’ என கூறி இருந்தார்.
இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த முரளிதரன், வெங்கடேசனிடம் ரூ.2 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித்தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த முரளிதரனை போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை செய்த போது, அங்கிருந்த 27 பேரின் பாஸ்போர்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான முரளிதரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் சுரேஷ் என்ற விஜய் ஆனந்த் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.