உலகைக் கவரும் ‘நைனிடால்’


உலகைக் கவரும் ‘நைனிடால்’
x
தினத்தந்தி 2 April 2017 12:46 PM IST (Updated: 2 April 2017 12:46 PM IST)
t-max-icont-min-icon

கோடைகாலத்தை இனிமையாக கழிக்க நம் நாட்டில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

கோடைகாலத்தை இனிமையாக கழிக்க நம் நாட்டில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக மலைப் பிரதேசங்களே கோடை சுற்றுலாவுக்கு சிறந்தது. அங்கு குளிர்ச்சியுடன், எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளும் கிடைக்கும். மனதுக்கும் இதமாக இருக்கும். இயற்கையை அதிகம் நேசிப்பவர்களுக்கு ஏற்ற இடமாக இருப்பது, நைனிடால்.

கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இது அமைந்துள்ளது. ‘தால்’ என்றால் ஏரி. (அதுவே ‘டால்’ என்று உச்சரிக்கப்படுகிறது). ஊரை சுற்றி ஏரிகள் இருப்பதால் அந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஏரியைச் சுற்றி அமைந்துள்ள இயற்கையழகு மனதை கொள்ளை கொள்ளும். படகு சவாரி ரம்மியமாக இருக்கும். பனிமூட்டம் கொண்ட மலைச் சிகரங்களும், வானுயர்ந்த மரங்களும், பறவைகள் எழுப்பும் இனிய ஓசைகளும், ஜிலுஜிலுவென சிலிர்த்து ஓடும் நீர் நிலைகளும், ஆங்காங்கே மலையிலிருந்து குதித்து விழும் நீர்வீழ்ச்சிகளும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கும்.

நைனிடால் இயற்கை காட்சிகளுக்கு பெயர்போனது. அதனால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருகிறார்கள். அன்று முதல் இன்று வரை இங்கு வசீகரிக்கும் இயற்கை காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. இயற்கையை நேசிப்பவர்கள் நைனிடாலுக்கு ஒருமுறை  சென்று வரலாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நகரம் இது. 1841–ல் பிவைரன் என்ற ஆங்கிலேய அதிகாரி, இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தைக்கண்டு வியந்துபோனார். இயற்கை அதிசயம் நிறைந்த இந்த பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தார். அங்கே தனக்கென்று ஒரு வீட்டையும் அமைத்துக் கொண்டார். அந்த வீட்டிற்கு ‘பில் கிராம் காட்டேஜ்’ என்று பெயர் சூட்டினார். அப்போதே நைனிடால் புகழ்பெறத் தொடங்கியது. ஆங்கிலேயர்கள் அதை ஒரு சிறந்த கோடை வாசஸ்தலமாக அறிவித்ததோடு, அப்போது அந்த நகரத்தை உத்தர பிரதேசத்தின் தலைநகரமாகவும் ஆக்கினார்கள். (முன்பு உத்தரகாண்ட், உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது)

அங்கு அமைந்திருக்கும் புகழ்பெற்ற பகுதிகளை பார்ப்போம்!

நைனி பீக்

அங்கிருக்கும் மலை சிகரங்களில் மிகவும் உயர்ந்தது, நைனி பீக். இது நகரத்தின் மையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2610 மீட்டர் உயரமுள்ள இந்த மலைச் சிகரத்திலிருந்து பனிமூடிய இமயமலைச் சிகரங்கள் மற்றும் நகரின் எழிலையும் காணலாம். பஸ், டாக்ஸி தவிர மலைப் பகுதிகளில் செல்ல குதிரை சவாரியும் உண்டு.

கேங் கார்டன்

இந்த தோட்டம் அற்புதமானது. ஆங்காங்கே சிறுசிறு குகைகள் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை வளங்களை அங்கே சிறப்பாக பராமரிக்கிறார்கள். கோடைகாலத்தில் அந்த குகைகள் மிக குளிர்ச்சியாக இருக்கும். குழந்தைகளை அந்த குகைத் தோட்டங்கள் வசீகரிக்கும். பெரியவர்கள், குழந்தைகளுக்கென தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஸ்னோ வியூவ்

பனியால் மூடப்பட்ட இமயமலை சிகரங்களை இந்த ‘ஸ்னோ வியூவ்’ முனையில் இருந்து காணலாம். 2270 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்திலிருந்து வடக்கு இமயமலை மலைச் சிகரங்களின் அழகை கண்டு ரசிக்கலாம். தூரத்திலிருந்து பார்த்தாலும் மனதிற்கு பரவசத்தை அளிக்கும். அங்குசெல்ல கேபிள் கார்களும், குதிரைகளும் உள்ளன.

லேண்ட்ஸ் என்ட்

நகரத்தின் மையத்தில் இருந்து இந்த பகுதி, 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கடல் மட்டத்தி லிருந்து 3120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்து சுர்பாடால் என்ற ஏரியை காணலாம். தூரத்திலிருந்து பார்க்க அந்த ஏரி ஒரு பசுவைப் போன்று காட்சியளிக்கும். நகரின் கடைசி பகுதியான இதில் நின்றுகொண்டு, நகரின் ஒட்டுமொத்த காட்சியையும் பார்த்து ரசிப்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். ஆனால் கொஞ்சம் ஆபத்தும் இருக்கிறது. அந்த பகுதியில் சில இடங்களை கவனமாக கடக்கவேண்டும்.

லவ்வர்ஸ் பாயிண்ட்

டிபன் டாப் மலைக்கு சிறிது தூரத்தில் இந்த பகுதி அமைந்திருக்கிறது. இது காதலர்களையும், புதுமணத் தம்பதிகளையும் ஈர்க்கும் இடம். அழகிய தோட்டங்களுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த இடம் மனதிற்கு அமைதியைத் தரும். சுற்றிலும் எப்போதும் பனிமூட்டத்துடன் காட்சியளிப்பது இந்த இடத்தின் சிறப்பு. மேகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் உயரத்தில் இந்த தோட்டம் அமைந்துள்ளதால், அங்கு நாம் பார்க்கும் காட்சிகள் பழைய சினிமாக்களில் உள்ள தேவலோக காட்சிகளை நினைவுபடுத்தும்.

நைனி ஏரி

இந்த நகரத்திற்கு நைனிடால் என்ற பெயரை கொடுத்த இந்த ஏரி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரந்துள்ள இந்த ஏரி பார்க்க ரம்மியமாக இருக்கும். சுற்றியுள்ள இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே படகு சவாரி செய்வது சுகமான அனுபவம். இதற்கென தனி படகுகள் உள்ளன. இந்த ஏரியை சுற்றியுள்ள நிலப்பரப்பை மல்லிதால் என்று அழைக்கிறார்கள். இந்த நகரம் முழுவதும் நிலப்பரப்பு குறைவு. நீர்நிலைகள் அதிகம். அதனால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.

பீம் தால்

இதுவும் ஒரு அழகான ஏரி. நைனிடாலிலிருந்து 12 கி.மீ. தூரத்திலுள்ளது. பாண்டவர் களில் ஒருவரான பீமனின் நினைவாக இந்த ஏரி அமைந்துள்ளது. அதில் கூட்டம் கூட்டமாக நீர்ப் பறவைகளை காணலாம். இந்த ஏரியில் செல்லவும் படகு வசதி உண்டு.

நவ்குசியாதால்

9 கோணங்களிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவந்து, ஒன்று சேர்ந்து உருவாகியிருக்கும் ஏரி இது. சுற்றியுள்ள மலைகளிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சிகள் ஓடிவந்து ஓரிடத்தில் சங்கமிப்பது பார்க்க அழகான காட்சி. பல அரிய மூலிகைகள் இந்த ஏரியில் வந்து சேருவதாக கூறப்படுகிறது. அதனை உண்டு வாழும் மீன் இனங்களை இந்த ஏரியின் அரிய பொக்கி‌ஷம் என்று சொல்கிறார்கள். படகு சவாரி செய்பவர்கள் அனுமதியின்றி மீன் பிடிக்கக்   கூடாது. மீன்களை துன்புறுத்தவும் கூடாது என்ற அறிவிப்பு பலகை நம்மை வரவேற்கும்.

பீம்தால் பகுதியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி 192 அடி ஆழம் கொண்டது. ரோயிங் போட் மற்றும் பெடல் போட்கள் இங்குள்ளது.

இங்கு ஒரு உயிரியல் பூங்காவும் உள்ளது. அந்த மலைப்பகுதியில் வாழும் பறவைகளும், மிருகங்களும் அந்த பூங்காவில் உலவும்.

நைனிடால் சாகசம்புரிய விரும்பும் இளைஞர்களையும் வசீகரிக்கிறது. அங்கு மலையேற்றம் செல்ல  வசதியான இடங்கள் நிறைய உள்ளன. இயற்கையை அனுபவித்தபடி, சுத்தமான காற்றை சுவாசித்தபடி மனதையும், உடலையும் உற்சாகப்படுத்த டிரக்கிங் சென்று வரலாம்.



டிபன் டாப்

செயற்கையாக ஒரு மலையை உருவாக்கி  அதற்கு இவ்வாறு ஒரு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  இதை தூரத்தில் இருந்து பார்த்தால் டிபன் பாக்ஸ் போன்றே தோன்றும். ‘டோரோதி சீட்’ என்றும் அந்த பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேய ராணுவ அதிகாரி தன் மனைவி ஞாபகார்த்தமாக இதை வடிவமைத்தார். அதன் உச்சியிலிருந்து நகரின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.


Next Story