2 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தொடங்கி வைத்தார்


2 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 April 2017 4:30 AM IST (Updated: 2 April 2017 9:15 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 229 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் துணை சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை நமது இந்தியாவில் அறவே ஒழிக்கும் பொருட்டு கடந்த 21 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 22–வது ஆண்டாக இம்முகாம் இன்று (நேற்று) தொடங்கி உள்ளது. இதன் அடுத்த சிறப்பு முகாம் வருகிற 30–ந் தேதி நடைபெற உள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் நம்நாட்டில் பெருமளவில் போலியோ நோய் தாக்கம் குறைக்கப்பட்டு தற்சமயம் அந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளோம்.

வீடு, வீடாக...

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 7,884 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மற்ற இடைப்பட்ட நாட்களில் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.

இப்பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், சினிமா தியேட்டர்கள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர தொலை தூரத்தில் உள்ள எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குழந்தை கூட விடுபடக்கூடாது. அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 229 குழந்தைகளுக்கு, 1971 முகாம்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) கிரிஜா, துணை இயக்குனர்கள் மீரா (சுகாதாரப்பணிகள்), ராஜேந்திரன் (குடும்பநலம்), மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு குடும்பம், குடும்பமாக பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களின் குழந்தைகளுக்கு பொது சுகாதாரம் சார்பில் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.


Next Story