நீட் தேர்வால் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாக முடியாது அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டி
நீட் தேர்வால் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாக முடியாது
பரமக்குடி,
பரமக்குடி ராஜிவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் நாராயணன்–பிரேமாவதி இல்ல திருமணவிழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் செல்வக்குமார் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:– கோவா உள்பட 5 மாநில தேர்தலில் ராகுல்காந்தியை முன்வைத்து தான் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. அப்போது அவர் ஊழலை அனுமதிக்கமாட்டோம் என வாக்குறுதி அளித்தார். இதனால் கோவாவில் 18 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் ஆட்சியை கைப்பற்றிஉள்ளது. கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச்சொல்லி பா.ஜனதா நெருக்கடி கொடுக்கிறது. நான்கு மாநிலத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதற்கு ராகுலின் உழைப்பு தான் காரணம். பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை தேச விரோதிகள் என பிரதமர் மோடி சித்தரிக்கிறார். 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததை விட பிரதமர் மோடியின் 2½ ஆண்டு ஆட்சியில் அதிகஅளவு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஆதார் திட்டம், நரேகா திட்டம் போன்றவற்றை எதிர்த்த பிரதமர் மோடி தற்போது அவைகளை செயல்படுத்தி வருகிறார்.
நீட் தேர்வுமக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு சாதி, மதம், மொழியின் பெயரால் பா.ஜனதா அரசியல் ஆதாயம் தேடுகிறது. காங்கிரஸ் கட்சிதான் இந்தியன் என்ற தேச உணர்வோடு நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் தான் ரூ.72,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தடுக்க ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது. நீட் தேர்வால் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களாக வரமுடியாது. இதற்கு ஆதரவாக பா.ஜனதா செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்கியது பிரதமர் மோடியின் ராஜதந்திர வேலைதான். அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? என்பது அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பொறுத்தது. ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது பிளவுபட்டிருந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தை மீட்டுக்கொடுத்தார். அதை எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா விளம்பரத்திற்காக எதையாவது பேசி முக்கியத்துவம் பெற நினைப்பார். அரசியல் நாகரீகம் அறிந்து பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பரமக்குடி காங்கிரஸ் நகர் தலைவர் அப்துல் அஜீஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட துணை தலைவர் மகாதேவன், சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.