வெம்பக்கோட்டை பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பால் தொழிலாளர்கள் பரிதவிப்பு
வெம்பக்கோட்டை பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் செவல்பட்டி, முத்துச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் பிரதான தொழிலாக செங்கல் தயாரிப்பு இருந்து வந்தது. வைப்பாற்றில் மண் எடுத்து செங்கல் தயாரிக்கப்பட்டு வந்தது. ஒரு டிராக்டர் லோடுக்கு ரூ.700 கொடுத்து செங்கல் தயாரித்து வந்தார்கள். இந்த நிலையில் வைப்பாற்றில் மண் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் சீவலப்பேரி, பேரையூர், சேத்தூர், செங்கோட்டை, சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்து மண் கொண்டு வரப்பட்டது. டிப்பர் லாரியில் ரூ.25 ஆயிரம் கொடுத்து மண் கொண்டு வர வேண்டிய நிலை உருவானது.
மேலும் அந்த மண் தரமானதாக இல்லாததால் ஆயிரம் கல் தயாரித்தால் பாதி கற்கள் உடைந்து போகும் நிலை ஏற்பட்டது. மேலும் தண்ணீர் தட்டுப்பாடும் இருந்ததால் செங்கல் சூளை நடத்தியவர்கள் கடும் இக்கட்டுக்குள்ளானார்கள். கூடுதல் விலை கொடுத்து மண் வாங்குவதோடு தண்ணீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவானதை தொடர்ந்து அந்த தொழில் நலிவடைந்து விட்டது.
மேலும் சிமெண்ட் கற்கள் அதிக அளவில் வரத்தொடங்கின. அந்த கற்கள் செங்கலை விட குறைவான விலைக்கு கிடைப்பதால் பலர் செங்கல் வாங்குவதை தவிர்க்க தொடங்கி விட்டனர். இதனால் செங்கல் தயாரிப்பு நின்று போனது. செவல்பட்டியில் 200 செங்கல் சூளைகள் இருந்த நிலையில் இப்போது 10 சூளைகளே உள்ளன. முத்துச்சாமிபுரத்தில் 50 சூளைகள் இருந்த நிலையில் இப்போது 5 சூளைகளே உள்ளன.
பரிதவிப்புஏராளமான செங்கல்சூளைகள் இருந்ததால் இந்தப்பகுதியில் பலர் அந்த தொழிலையே நம்பி இருந்தார்கள். ஆண்கள் ரூ.500–ம் பெண்கள் ரூ.350–ம் தினக்கூலியாக பெற்று வந்தார்கள். தற்போது வேலை இழந்து பரிதவிக்கும் அவர்கள் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் வெம்பக்கோட்டை அணை பகுதியினை தூர்வாரும் வகையில் அங்கு மண் எடுக்க அனுமதி வழங்கி குறைந்த விலையில் செங்கல் உற்பத்திக்கு மண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.