கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-02T22:06:22+05:30)

கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையத்தில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கதிரவன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் முன்னிலை வகித்தார்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:–

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 533 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்கள் 10 ஒன்றியங்களில் 888 மையங்கள், 2 நகராட்சி பகுதிகளில் 63 மையங்கள் என 951 மையங்களில் நடைபெறுகிறது.

3,804 பணியாளர்கள்

மேலும் பிற இடங்களிலிருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக நமது மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், ரெயில் நிலைய பணியாளர்கள், மேம்பால பணியாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியவர்களின் குழந்தைகளுக்கும் நடமாடும் முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 56 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 நகர் நல மையங்கள் மற்றும் 6 அரசு மருத்துவமனைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 2,25,000 டோஸ் வழங்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்துகளை பாதுகாக்க உரிய குளிர்சாதன பெட்டிகள் அனைத்து மையங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முகாம்களில் 3,804 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் இனியாழ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story