விக்கிரவாண்டி அருகே ஓட்டலில் ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை சுவரில் துளைபோட்டு கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விக்கிரவாண்டி அருகே ஓட்டலில் ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை சுவரில் துளைபோட்டு கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 April 2017 4:00 AM IST (Updated: 2 April 2017 11:23 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே சுவரில் துளைபோட்டு ஓட்டலில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கெங்கராம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 48). இவர் சித்தனி அருகே விடூர் அணை கூட்டுரோட்டில் இரவு நேர ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவர் சொந்த வேலை காரணமாக ஓட்டலை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். இதனால் ஓட்டல் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பூட்டியே கிடந்தது.

இந்த நிலையில் ஊரில் இருந்து வந்த சரத்குமார் ஓட்டலை திறந்து உள்ளே சென்றார். அங்கே ஓட்டலின் பின்புறம் சுவரில் துளைபோடப்பட்டு இருந்தது. பின்பக்க கதவும் திறந்து கிடந்தது. ஓட்டலில் இருந்த கியாஸ் அடுப்பு, சிலிண்டர், சமையல் பாத்திரங்கள், மின்சாதன பொருட்கள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட எந்த பொருட்களும் இல்லை.

ரூ.2 லட்சம்

இதில் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சரத்குமார் ஓட்டலை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவருடைய ஓட்டலின் பின்பக்க சுவற்றில் பெரிய அளவில் துளைபோட்டு உள்ளே புகுந்து, பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் ஆகும்.

இது குறித்து சரத்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவரில் துளைபோட்டு ஓட்டலில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story