பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 April 2017 3:15 AM IST (Updated: 3 April 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், அனுப்பர்பாளையம், அவினாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவிவருகிறது. குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சாக்கடைகளை தூர்வாரவேண்டும். சுகாதார பணிகளை மேம்படுத்தி மர்ம காய்ச்சல் வருவதை தடுக்கவேண்டும். மேம்பாலங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும். ரே‌ஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரம், தெற்கு மாநகரம், தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம் வேலம்பாளையம் நகரகுழு ஆகியவை சார்பில் 40–க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ், தெற்கு மாநகர செயலாளர் ராஜகோபால், தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி, வடக்கு மாநகர செயலாளர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, வேலம்பாளையம் நகர செயலாளர் ரங்கராஜ் உள்பட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டு அந்தந்த பகுதிகளில் போராட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்கள்.

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாநகராட்சி 18 மற்றும் 19–வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வாவிபாளையத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது. வாவிபாளையம் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பனியன் தொழிலாளர் சங்க பொது செயலாளர் சம்பத் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார், முன்னாள் எம்.எல்.ஏ.தங்கவேல், திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிகாமணி, சேடர்பாளையம் கிளை செயலாளர் கோபால், குருவாயூரப்பன்நகர் கிளை செயலாளர் சந்திரன், வாவிபாளையம் நிர்வாகி பானுமதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதில் வாவிபாளையம், குருவாயூரப்பன்நகர், சேடர்பாளையம், ஜி.என்.கார்டன், பெருமாநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரி வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர் காளியப்பன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். இதேபோல் தோட்டத்துப்பாளையம், பெரியார்காலனி, அனுப்பர்பாளையம் உள்பட 15 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அவினாசி

அவினாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர்,நால்ரோடு, காளம்பாளையம்,பி.ஆர்.நகர் ஆகிய இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதி, சாலைவசதி, தண்ணீர் உள்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நேற்றுகாலை 10 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. பெருமாநல்லூரில் கிளை செயலாளர் கருப்பசாமி தலைமையிலும் காளம்பாளையத்தில் அதன் கிளை செயலாளர் விஸ்வநாதன் தலைமையிலும் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story