மைனர் என்று கூறி கருணை வேலைக்கான மனுவை நிராகரிக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மைனர் என்று கூறி கருணை வேலைக்கான மனுவை நிராகரிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ஹரிவசந்த். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
என் தந்தை சேகர், முசிறி தாலுகா அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2007–ம் ஆண்டு பணியில் இருக்கும்போது அவர் இறந்து போனார். இதைதொடர்ந்து, எனக்கு கருணை வேலை வழங்கும்படி என் தாயார் வருவாய்துறை செயலாளர், திருச்சி கலெக்டர் ஆகியோரிடம் மனு கொடுத்தார்.
அரசாணைஎனக்கு 18 வயது நிறைவடையவில்லை என்று கூறி என் தாயார் அளித்த விண்ணப்பத்தை 2010–ம் ஆண்டு திருச்சி கலெக்டர் நிராகரித்தார். 18 வயது பூர்த்தியடையும் முன்பு கருணை வேலை கேட்டு மனு கொடுத்தாலும், அவர்களுக்கு வேலைக்கான நியமன உத்தரவு வழங்கும்போது 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் கருணை வேலை வழங்கலாம் என்று அரசாணை உள்ளது.
தற்போது வரை, எனக்கு கருணைவேலைக்கான நியமன உத்தரவு வழங்கவில்லை. தற்போது எனக்கு 19 வயது ஆகிறது. அரசாணைப்படி எனக்கு கருணை வேலை கோரி என் தாயார் கொடுத்த மனுவை கலெக்டர் நிராகரித்தது நியாயமற்றது. எனவே, கருணை வேலை கோரிய மனுவை நிராகரித்து கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
2 மாதத்துக்குள் கருணை வேலைஇந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். மனுதாரருக்காக வக்கீல் சி.எஸ்.ரவிச்சந்திரன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மைனர் என்று கூறி கருணை வேலைக்கான மனுவை நிராகரிக்கக்கூடாது. மைனராக இருக்கும் நபருக்கு கருணை வேலை வழங்கும்போது மேஜர் வயதை அடைந்திருந்தால் அவருக்கு கருணை வேலை வழங்கலாம் என்று அரசாணை உள்ளது.
இந்த அரசாணைப்படி மனுதாரரின் மனு பரிசீலிக்கப்படவில்லை. தற்போது மனுதாரருக்கு 19 வயது ஆகிறது. மனுதாரர் மேஜர் வயதை அடைந்து விட்டதால் தற்போது அவருக்கு கருணை வேலை வழங்கலாம். எனவே, மனுதாரரின் மனுவை 2 மாதத்துக்குள் பரிசீலித்து அவருக்கு கருணை வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.