ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வீழ்ச்சி
ஆண்டிப்பட்டி மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து அதிகரித்ததால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி லாரிகள் மூலம் தங்கள் தோட்டங்களுக்கு கொண்டுவந்து பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மல்லிகைப்பூ சாகுபடியிலேயே விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விலை வீழ்ச்சிஇதனால் மல்லிகை பூக்களின் விளைச்சல் அதிகரித்தது. அதைத்தொடர்ந்து மார்க்கெட்டுக்கு மல்லிகை பூவின் வரத்து வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகரித்தது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 ஆயிரம் கிலோ வரை மல்லிகை பூ விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. இதனால் அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.250 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு கிலோ மல்லிகை பூவுக்கு ரூ.60 வரையே விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது கிடைக்கும் விலை, பூக்களை பறிப்பவர்களுக்கு கூலி கொடுக்க கூட போதுமானதாக இல்லை. வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்த செலவுகளை சமாளித்து வருகிறோம். விலை வீழ்ச்சி காரணமாக ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.