சினிமா படப்பிடிப்பு குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து: லாரி டிரைவர் கைது


சினிமா படப்பிடிப்பு குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து: லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 3 April 2017 3:45 AM IST (Updated: 3 April 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

சினிமா படப்பிடிப்பு குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதி நடந்த விபத்தில் மேலும் ஒரு சமையல் தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம்,

நடிகர் பிரபுதேவா, லட்சுமிமேனன், தங்கர்பச்சான் ஆகியோர் நடிக்கும் “யங் மங் சங்” சினிமாவின் படப்பிடிப்பு தஞ்சை மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 31-ந் தேதி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் படப்பிடிப்பு நடத்துவதற்காக படக்குழுவினர் 5-க்கும் மேற்பட்ட வேன்களில் கபிஸ்தலம் வழியாக திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதில் சமையல் தொழிலாளர்கள் பயணித்த வேன் கபிஸ்தலம் அருகே கருப்பூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பெரம்பலூரில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி, வேன் மீது மோதி விபத்து நடந்தது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த கும்பகோணம் சாக்கோட்டை பிச்சைமுத்து மகன் விஜயகுமார்(வயது40), சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி ஆறுமுகம்(56) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடி வந்தனர்.

டிரைவர் கைது

விபத்தில் படுகாயம் அடைந்த சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமையல் தொழிலாளர்கள் செல்லப்பா, ராமமூர்த்தி, மோகன், பாப்பாத்தி அம்மாள், தமிழரசி, சுரேஷ் (30) ஆகிய 6 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சுரேஷ், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதனிடையே லாரியை ஓட்டி வந்த பெரம்பலூரை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story