பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி


பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி
x
தினத்தந்தி 3 April 2017 4:30 AM IST (Updated: 3 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே டயர் வெடித்ததால் பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது. இதில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

திருவாரூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது65). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி மல்லிகா (60). இவர்கள் 2 பேரும் தஞ்சையில் நடந்த உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் 2 பேரும் காரில் திருவாரூர் திரும்பினர்.

கார் தஞ்சையை அடுத்த விளார் பைபாஸ் சாலையில் வெட்டிக்காடு பிரிவு சாலை அருகே கல்லணைக்கால்வாய் பாலத்தில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புசுவரில் மோதியது. இதில் முத்துக்குமாரசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மல்லிகா படுகாயம் அடைந்தார்.

கார் தீப்பிடித்து எரிந்தது

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த மல்லிகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த முத்துக்குமாரசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story