முதல் தவணையாக 2 லட்சத்து 69 ஆயிரத்து 809 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


முதல் தவணையாக 2 லட்சத்து 69 ஆயிரத்து 809 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
x
தினத்தந்தி 3 April 2017 4:15 AM IST (Updated: 3 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் முதல் தவணையாக 2 லட்சத்து 69 ஆயிரத்து 809 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு இன்றும், நாளையும் வீட்டிற்கே வந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

திருச்சி,

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை முற்றிலும் ஒழிக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு முதல் தவணையாக நேற்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வீட்டிற்கு வந்து வழங்கப்படும்

சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் கை விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் முதல் தவணையாக சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்து 809. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு 3-ந்தேதியும்(இன்று), 4-ந்தேதியும்(நாளை) மருத்துவப் பணியாளர்கள் வீடுதேடி சென்று சொட்டு மருந்து வழங்குவார்கள். திருச்சி மாவட்டத்தில் 1,692 நிலையான மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ள பகுதிகளில் 70 நடமாடும் குழுக்கள் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்்பட்டது.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும்் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நகர் நல மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும் ரெயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியிலிருந்து செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ரெயிலில் பயணம் செய்த 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி தனி அதிகாரி மற்றும் ஆணையர் ரவிச்சந்திரன், மாநகராட்சி முதன்மை பொறியாளர் நாகேஷ், இணை இயக்குனர்(குடும்பநலம்) சம்சாத்பேகம், துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) ரவீந்திரன், நகர்நல அலுவலர் அல்லி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story