தென்னிந்திய வலுதூக்கும் போட்டி நெல்லை மாவட்ட அணி முதலிடம்


தென்னிந்திய வலுதூக்கும் போட்டி நெல்லை மாவட்ட அணி முதலிடம்
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2 April 2017 8:50 PM GMT)

நெல்லையில் தென்னிந்திய அளவில் நடந்த வலுதூக்கும் போட்டியில் நெல்லை மாவட்ட அணி முதல் இடத்தை பிடித்தது.

நெல்லை,


தென்னிந்திய அளவிலான வலுதூக்கும் போட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று காலையில் தொடங்கியது. சப்–ஜூனியர், ஜீனியர், சீனியர் மற்றும் பெஞ்சு பிரஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்க செயலாளர் நாகராஜன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து போட்டிகள் நடந்தன. போட்டிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை தேனி, ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கு 53, 59, 66, 74, 83, 93, 105, 120 ஆகிய எடை பிரிவுகளில் போட்டிகள் தனித்தனியாக நடந்தன. பெண்களுக்கு 43, 47, 52, 57, 63, 72, 84 ஆகிய எடை பிரிவுகளில் போட்டி நடந்தன. ஒவ்வொரு மாவட்ட அணியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.

நெல்லை மாவட்டம் முதல் இடம்


இதில் 60 புள்ளிகள் பெற்று நெல்லை மாவட்ட அணி முதல் இடத்தையும், 57 புள்ளிகள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அணி இரண்டாவது இடத்தையும், 52 புள்ளிகள் பெற்று கன்னியாகுமரி மாவட்ட அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்கால் ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் துரை, செயலாளர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம், நெல்லை மாவட்ட வலு தூக்கும் சங்கம், நெல்லை ஸ்டார் உடற்பயிற்சி கழகம் ஆகியவை இணைந்து செய்து இருந்தன.


Next Story