மாவட்ட செய்திகள்

1,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு + "||" + 1,100-year-old inscription found

1,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

1,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
நொடியூர் மருதன் ஏரியில் 1,100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தலைவர் ராஜேந்திரன், நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் பள்ளி ஆசிரியர் சோமசுந்தரம், கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாலமுருகன், சுதிவர்மன், ஹரிகர சுதன், சரவணன், உள்ளூர் வழிகாட்டிகளாக நடராஜன், நாகராஜன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.


இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது:-

நொடியூர்பட்டினம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் கீழ் செங்கிளி நாடு என்ற துணை நிர்வாக மண்டலமாக 17-ம் நூற்றாண்டு வரை செழிப்போடு விளங்கியுள்ளதை நொடியூரில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அக்கல்வெட்டுகளில் நீர் பாசனம், கோவில் பராமரிப்புக்காக வரி செலுத்துதல், சுங்க வரி வசூலித்தல், இங்கு அமைந்திருந்த திருஞான சம்பந்தர் மட பராமரிப்பு உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி தஞ்சைக்கு அருகே உள்ள உடையார் கோவில் சிவன் கோவிலுக்கு 3-ம் குலோத்துங்க சோழன் காலத்தில் (கி.பி. 1,196) கல் எங்கிருந்து கொணர பெற்றது என்பதனை, நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையில் இருந்தும் சிலை கொண்டு வந்து என்ற கல்வெட்டு குறிப்பின் மூலம் சோழர் ஆட்சிக்காலத்தில் இந்த ஆட்சிப்பகுதி மிக முக்கிய பகுதியாக விளங்கியதை அறியலாம்.

மழைநீர் சேகரிப்பு

ஏரிகளில் இருந்து பாசனத்துக்கு நீரை வெளியேற்ற அன்றே சிறந்த முறையில் மதகுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மதகுகளுக்கு பல பெயர்கள் இடப்பட்டிருந்தன. சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை முதலியன அப்பெயர்கள். தற்காலத் திருகு அடைப்பான் போன்று நீர் வெளியேறும் அளவை சிறுகச் சிறுக குறைக்கவோ அதிகரிக்கவோ கூடிய குமிழிகளும் அன்றே இருந்தன. தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெறுகின்றன. அதனைக் கொண்டுதான் வருடம் முழுவதற்குமான நீர்த்தேவையைச் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பழந்தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஏரி-குளங்களை உருவாக்கி, அந்த இரண்டு மாத மழை நீரையும் முழுமையாகச் சேகரித்து பயன் படுத்திக் கொண்டனர். அவற்றிற்கு சான்றாக இருப்பதுதான் இந்த மருதன் ஏரிக்குமிழியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி அருகே சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
திருச்சி அருகே சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. பல்லவர் கால வாகீசர் சிற்பம் கண்டெடுப்பு தென்னங்கன்றுகளை நட குழிதோண்டியபோது கிடைத்தது
தஞ்சை அருகே தென்னங்கன்றுகளை நட குழிதோண்டியபோது பல்லவர் கால வாகீசர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
3. குளத்தில் வீசப்பட்ட ஐம்பொன் சாமி சிலை கண்டெடுப்பு போலீசார் விசாரணை
முத்துப்பேட்டை அருகே குளத்தில் வீசப்பட்ட ஐம்பொன் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.