டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அக்காள்– தம்பி பலி பொதுமக்கள் சாலைமறியல்


டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில்  சென்ற அக்காள்– தம்பி பலி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 6 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-06T18:30:32+05:30)

கோவில்பட்டியில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அக்காள்– தம்பி பலியானார்கள்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அக்காள்– தம்பி பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அக்காள்– தம்பி

கோவில்பட்டி நடராஜபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 56). பெயிண்டர். இவருடைய மகள் பேச்சியம்மாள் என்ற பிரதீபா (23). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் எம்.பில். படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த தனியார் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார். பின்னர் அவர், ஈரோடு– நெல்லை பாசஞ்சர் ரெயிலில் கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு இரவு 10 மணி அளவில் வந்தார்.

அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக, சித்தி மகனான(தம்பி) கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த கருத்தபாண்டியன் மகன் கார்த்திக் ராஜா (20) மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு சென்றார். கார்த்திக் ராஜா, கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார்.

டேங்கர் லாரி மோதல்

கார்த்திக்ராஜா தனது மோட்டார் சைக்கிளில் பிரதீபாவை ஏற்றிக்கொண்டு, நடராஜபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி மெயின் ரோடு வழியாக சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சென்றபோது, பின்னால் வந்த தனியார் நிறுவன டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் கண்இமைக்கும் நேரத்தில் லாரியின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டது. சிறிது தூரம் மோட்டார் சைக்கிள் சாலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், லாரியின் டயர் ஏறியதில் பிரதீபா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக்ராஜா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

முதல்தலைமுறை பட்டதாரி

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். டேங்கர் லாரியில் இருந்த தண்ணீரை திறந்து விட்டு, அடியில் சிக்கிய பிரதீபா உடலையும், காயங்களுடன் கார்த்திக் ராஜாவையும் மீட்டனர். பிரதீபாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக்ராஜாவுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடல் அந்த ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் இறந்த பிரதீபா முதல் தலைமுறை பட்டதாரி ஆவர். கார்த்திக் ராஜாவும் அவர்களுடைய வீட்டில் பட்டப்படிப்பு படிப்பு படித்து வந்த முதல் நபராவார்.

கோவில்பட்டியில் சாலைமறியல்

விபத்தில் பலியான 2 பேரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரையிலும் அவர்களின் உடல்களை பெற்றுச் செல்ல மாட்டோம் என்று கூறி, உறவினர்கள், பொதுமக்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று மதியம் கொளுத்தும் வெயிலில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்வம், அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாத்துரை, முக்குலத்தோர் புலிப்படை பெருமாள், ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் பவுன் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், கிழக்கு இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் அதிகாரிகள், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், சாலைமறியல் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தற்போது பிரதீபா உடல் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியிலும், கார்த்திக்ராஜா உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் பரிசோதனை செய்யப்படாமல் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த கோர விபத்து தொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரி டிரைவரான கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்த தங்கராஜை (50) கைது செய்தனர்.


Next Story