நெல்லை டவுனில் செல்போன் கோபுரத்தில் ஏறி பா.ம.க. பிரமுகர் மிரட்டல் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தல்


நெல்லை டவுனில் செல்போன் கோபுரத்தில் ஏறி பா.ம.க. பிரமுகர் மிரட்டல்  ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-06T18:48:53+05:30)

நெல்லை டவுனில் செல்போன் கோபுரத்தில் ஏறி பா.ம.க. பிரமுகர் மிரட்டல் விடுத்தார். அவர் ஆர்.கே.நகர் தேர்லை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினார்.

நெல்லை,

நெல்லை டவுனில் செல்போன் கோபுரத்தில் ஏறி பா.ம.க. பிரமுகர் மிரட்டல் விடுத்தார். அவர் ஆர்.கே.நகர் தேர்லை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினார்.

திடீர் மிரட்டல்

நெல்லை டவுன் பாரதியார் ரோடு பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று பிற்பகலில் ஒருவர் வேகமாக ஏறினார். பின்னர் கோபுரத்தின் முக்கால்பகுதிக்கு சென்று அங்கிருந்தவாறு கோ‌ஷங்கள் போட்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை கீழே இறங்கி வருமாறு கேட்டனர். ஆனால் அவர் கீழே இறங்கி வரமறுத்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை டவுன் போலீஸ் உதவி கமி‌ஷனர் மாரிமுத்து மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் பேட்டை தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்தவரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்து விசாரித்தனர்.

தேர்தலை ரத்து செய்க

இதில் அவர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பூந்தோட்ட தெருவை சேர்ந்த, பா.ம.க. நிர்வாகி கங்கை முருகன் (வயது 50) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா, முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையே செல்போன் கோபுரத்தின் ஓரிடத்தில் பருந்து கூடுகட்டி முட்டையிட்டு இருந்தது. கங்கை முருகன், அந்த முட்டைகளை எடுத்து வேடிக்கை காட்டினார். இதனால் பருந்து அவரை சுற்றி, சுற்றி வந்தது.

பாதுகாப்பாக மீட்டனர்

இதன் பின்னர் போலீசார், அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்கள். தீயணைப்பு படை வீரர்கள் அருகில் சென்று கங்கை முருகனை பிடித்து பாதுகாப்பாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். சுட்டெரித்த வெலியின் தாக்கத்திலும், செல்போன் கோபுரத்தின் இரும்பு கம்பிகள் கடுமையாக சுட்ட போதிலும் 1 மணி நேரம் கங்கை முருகன் தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து கங்கை முருகனை போலீசார் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். கங்கை முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் அவ்வப்போது செல்போன் கோபுரம், விளம்பர பேனர்கள், மின்கம்பம், உயரமான மரங்களில் ஏறி நின்று திடீர் கோ‌ஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வந்தார். தற்போது மீண்டும் அவர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story