ஸ்ரீவில்லிபுத்தூரிர் பகுதியில் குடிநீர் பஞ்சம் ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டன


ஸ்ரீவில்லிபுத்தூரிர் பகுதியில் குடிநீர் பஞ்சம் ஆழ்குழாய் கிணறுகளும் வறண்டன
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-06T18:51:58+05:30)

ஸ்ரீவில்லிபுத்தூரில் தண்ணீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் சுமார் 2 மணி நேரமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியினால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டம் 600 அடிக்கு கீழே போய் விட்டதால், மற்ற உபயோகத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது.

மேலும் வீடுகளில் தாமிரபரணி குடிநீரை சேமித்து வைத்து 15 நாட்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீரை ரூ. 35–க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிலர் கிணற்று நீரை கேன்களில் அடைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீரைப்போல விற்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து ஐ.எஸ்.ஓ. முத்திரை உள்ள கேன்களை வாங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம்சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நகரசபை மூலம் வினியோகிக்கப்படும் தாமிரபரணி கூட்டுக்குடிநீரை காய்ச்சி பயன்படுத்துமாறும் கூறியுள்ளனர்.

பிள்ளையார்நத்தம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள பிள்ளையார்நத்தம் பகுதியிலும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. மேலும் இங்குள்ள மலையடிவாரத்தில் தனியார் நிறுவனத்தினர் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. யூனியன் அதிகாரிகள் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடுமையான வறட்சியினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள விலங்குகள் கேரள மலைப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றன.


Next Story