திருப்பரங்குன்றத்தில் பல்லாங்குழிகள் நிறைந்த பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதி கட்டப்பட்டு ஓராண்டிலேயே சேதம் அடைந்த அவலம்


திருப்பரங்குன்றத்தில்  பல்லாங்குழிகள் நிறைந்த பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதி கட்டப்பட்டு ஓராண்டிலேயே சேதம் அடைந்த அவலம்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-07T00:16:40+05:30)

திருப்பரங்குன்றத்தில் பல்லாங்குழிகள் நிறைந்த பாலத்தால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் தேவிநகர் முதல் பஸ் நிலையம் வரை ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் தொடக்கத்தில் மந்தகதியில் நடைபெற்று வந்தன. பின்னர் ஒரு வழியாக பணிகள் முடிந்த நிலையில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வந்து விட்டது. ஆகவே இந்தப் பாலம் திறக்கப்படாமலேயே மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

ஆனால் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டிலேயே பாலத்தின் மையப்பகுதியில் இருபுறத்தை இணைக்க கூடிய கம்பி பெயர்ந்து விட்டது. இதனால் வாகனங்கள் அந்தப்பகுதியை கடக்கும் போது பெரும் சப்தம் கேட்கிறது. மேலும் சில நேரங்களில் வாகன ஒட்டிகள் கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கோரிக்கை

புதிதாக அந்தப் பாலத்தில் வருபவர்கள் சப்தம் கேட்டு தானாகவே பயத்தில் வண்டியை கீழே விட்டு விடுகிறார்கள். இதுதவிர பாலத்தில் ஆங்காங்கே பல்லாங்குழி போன்று பள்ளங்கள் உள்ளன. அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் வாகனஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.

பாலம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டிலேயே இத்தகைய அவலம் ஏற்பட்டு இருப்பதை கண்டும், காணாதாது போல சம்பந்தப்பட்ட துறையினர் இருப்பது தான் வேதனையாக உள்ளது. இனியாவது பாலத்தில் உள்ள பள்ளங்களை போர்க் கால அடிப்படையில் சரிசெய்வதுடன், பாலத்தில் சேதம் அடைந்த பகுதியையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story